3845. செந்நெல வயலணி சிறுகுடி மேவிய
  ஒன்னலர் புரமெரித் தீரே
ஒன்னலர் புரமெரித் தீருமை யுள்குவார்
சொன்னல முடையவர் தொண்டே.            4

     4. பொ-ரை: செந்நெல் விளையும் வயல்வளமிக்க திருச்
சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
நம்மோடு சேராது பகைமை கொண்ட அசுரர்கள் வாழும்
திரிபுரங்களை எரித்த சிவபெருமானே! திரிபுரம் எரித்த உம்மை
நினைத்துப் போற்றும் சொல் நலமுடையவர்களே திருத்தொண்டர்கள்
ஆவர். (உமது வழிபாட்டின் பலனைப் பற்றிப் பிறருக்கு பதேசிக்கும்
தக்கோர் ஆவர் என்பர்).

     கு-ரை: செந்நெல் - செந்நெல் விளைகின்றனவாகிய. வயல்
அணி - வயல் சூழ்ந்த. ஒன்னலர் - ஒன்றலர் என்பதன் மரூஉ.
ஒன்றலர் - நம்மோடு சேராதவர். தொண்டு - உமது வழிபாட்டைப்
பற்றிப் பிறர்க்கு உபதேசிக்கும் தக்கோர் ஆவர். சொல் நலம் -
சொல்லும் நலம். நலம் - தகுதி.