3849. திரைசயவர் தொழுதெழு சிறுகுடி மேவிய
  தசமுகு னுரநெரித் தீரே
தசமுக னுரநெரித் தீருமைச் சார்பவர்
வசையறு மதுவழி பாடே.                    8

     8. பொ-ரை: எல்லாத் திக்குக்களிலுமுள்ளவர்கள் தொழுது
போற்றும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றவரும், இராவணனின் வலிமை அடங்கும்படி
கயிலைமலையின் கீழ் அவனை நெரித்தவருமான சிவபெருமானே!
அவ்வாறு இராவணனின் வலிமையை அடக்கிய உம்மைப்
பற்றுக்கோடாகக் கொண்டு வழிபடுபவர்களின் குற்றம் யாவும் தீர்ந்து
குணம் பெருகும். அது உம்மை வழிபட்டதன் பலனாகும்.

     கு-ரை: தசம் - பத்து, உரம் - வலிமை. சார்பவர் - பற்றுக்
கோடாக அடைபவர். வசையறும் அது - குற்றம் அற்றதாகிய
வழிபாடே வழிபாடெனப் படுவதாம். என் போல்பவர் பறித்திட்ட
முகையும் அரும்பும் எல்லாம் அம்போதெனக் கொள்ளும் ஐயன்
தன்னடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு
கோதாட்டுந்தன்மையால் வழிபாடு வசையற்றதாயிற்று.