3852. தேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய
  மானமர் கரமுடை யீரே
மானமர் கரமுடை யீருமை வாழ்த்திய
ஞானசம் பந்தன தமிழே.                   11

     11. பொ-ரை: வண்டுகள் விரும்பும் சோலைகளை உடைய
அழகிய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, மான் ஏந்திய கரமுடைய சிவபெருமானே! மான்
ஏந்திய கரமுடைய உம்மை வாழ்த்திப் போற்றி ஞானசம்பந்தனின்
இத்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்கள் இம்மை, மறுமைப்
பலன்களைப் பெறுவர்.

     கு-ரை: தேன் அமர் - வண்டுகள் விரும்பும், பொழில், மான்
அமர் - மான் தங்கிய, உம்மைப் பரவிய ஞானசம்பந்தன் தமிழே
(தனைப்பாடவல்லவர்க்கு அனைத்தும் நல்கும்) என்பது குறிப்பெச்சம்.