3938. கையம ரும்மழு நாகம்வீணை
       கலைமான் மறியேந்தி
மெய்யம ரும்பொடிப் பூசிவீசுங்
     குழையார் தருதோடும்
பையம ரும்மர வாடவாடும்
     படர்சடை யார்க்கிடமாம்
மையம ரும்பொழில் சூழும்வேலி
     வலஞ்சுழி மாநகரே.                  5

     5. பொ-ரை: இறைவன் கையில் மழு, பாம்பு, வீணை,
கலைமான்கன்று என்பனவற்றை ஏந்தியுள்ளவர். திருமேனியில்
திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவர். ஒளியை வீசி அசைகின்ற குழையும் தோடும் காதில் அணிந்துள்ளவர். படமாடும் பாம்பை அணிந்து
நடனமாடுபவர். படர்ந்த சடையையுடைய அப்பெருமான்
வீற்றிருந்தருளும் இடம், நாற்புறமும் வேலிபோன்று, இருளடர்ந்த
சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழி என்னும் மாநகரமாகும்.

     கு-ரை: கையின்கண் விரும்பத்தக்க, நாகம், வீணை,
கலைமான்கன்று, இவற்றையேந்தி, மெய் - உடம்பில். அமர்தல் -
விரும்புதல். வீசும் - ஒளியை வீசுகின்ற (எனச் செயப்படுபொருள்
வருவிக்க) குழையும். ஆர் தரு - பொருந்திய, தோடும், அரவும்
ஆடும்படி, திருக்கூத்தாடும் சடையார்க்கிடம். மை - கருமை. பொழில் வேலியாகச் சூழும் வலஞ்சுழி.