3943. குண்டரும் புத்தருங் கூறையின்றிக்
 

     குழுவா ருரைநீத்துத்
தொண்டருந் தன்றொழில் பேணநின்ற
     கழலா னழலாடி
 
வண்டம ரும்பொழின் மல்குபொன்னி
     வலஞ்சுழி வாணனெம்மான்
பண்டொரு வேள்வி முனிந்துசெற்ற
     பரிசே பகர்வோமே.                  10

     10. பொ-ரை: தீவினைக்கஞ்சாத சமணர்கள், ஆடையின்றிக்
கூட்டமாயிருப்பவர்கள். அவர்களும் புத்தர்களும் இறைவனை
உணராது கூறும் மொழிகளைத் தள்ளிவிடுங்கள். தொண்டர்கள்
சரியைத் தொழிலில் விரும்பி வழிபட்டு நிற்க. கழலணிந்த
திருவடிகளையுடைய சிவபெருமான் அழல் ஏந்தி ஆடுபவன்.
வண்டுகள் விரும்புகின்ற சோலைகளையுடையதும், காவிரியாறு
வலஞ்சுழித்துப் பாய்கின்றதுமான திருவலஞ்சுழி என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் முன்னொரு
காலத்தில் அவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைக்
கோபித்து அழித்த தன்மையைப் பகர்வோமாக.

     கு-ரை: குண்டர் - தீவினைக்கஞ்சாதவர்; ஆததாயிகள் என்பர்
வடநூலார். கூறை இன்றிக் குழுவார் குண்டர் எனக் கூட்டுக.
ஆடையின்றிக் கூட்டமாயிருப்பவர் என்பது பொருள். தொண்டு
அருந்தன் தொழில் பேண - தொண்டர்கள் பிறர் செய்தற்கரிய தனது
பணி விடைகளைப் போற்றிச் செய்ய. தொண்டு - தொண்டர்;
பண்பாகு பெயர். வலஞ்சுழிவாணர் - வலஞ்சுழியில் வாழ்பவர்.
பண்டு - முற்காலத்தில். ஒரு வேள்வி - தக்கனுடைய வேள்வியை.
முனிந்து - கோபித்து. செற்ற - அழித்த. பரிசே - தன்மையையே.
பகர்வோம் - புகழ்ந்து பேசுவோமாக. திருவாசகத் (தி.8)
திருவுந்தியார் இருபது பாடல்களுள் பதின்மூன்று பாடல்கள் தக்கன்
வேள்வி தகர்த்தமையைக் கூறுவது காண்க.