3955. பாடிய லுந்திரை சூழ்புகலித்
       திருஞான சம்பந்தன்
சேடிய லும்புக ழோங்குசெம்மைத்
     திருநாரை யூரான்மேல்
பாடிய தண்டமிழ் மாலைபத்தும்
     பரவித் திரிந்தாக
வாடிய சிந்தையி னார்க்குநீங்கு
     மவலக் கடல்தானே.                   11

     11. பொ-ரை: அலைஓசையுடைய கடல்சூழ்ந்த சீகாழியில்
அவதரித்த திருஞானசம்பந்தன், பெருமை பொருந்தியதும் ஓங்கும்
புகழ் உடையதும், சிவத்தன்மை உடையதுமான திருநாரையூர்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் மீது
பாடிய பத்துப்பாடல்களாலாகிய இத்தண்டமிழ் மாலையாகிய
பதிகத்தைப் பாடித் துதிக்கும் சிந்தையுடைய அடியார்களின்
கடல்போன்ற பெருந்துன்பம் நீங்கும்.

     கு-ரை: பாடுஇயலும் - ஓசை உடைய. திரைசூழ் - கடல்
சூழ்ந்த. சேடு இயலும் - பெருமை பொருந்திய.