4023. பருமதில் மதுரைமன் னவையெதிரே
       பதிகம தெழுதிலை யவையெதிரே.
வருநதி யிடைமிசை வருகரனே
     வசையொடு மலர்கெட வருகரனே
கருதலி லிசைமுர றருமருளே
     கழுமல மமரிறை தருமருளே
மருவிய தமிழ்விர கனமொழியே
     வல்லவர் தம்மிடம் திடமொழியே.       12

     12. பொ-ரை: பெரிய மதில்களையுடைய மதுரை நகரின்கண்
அரசனது அவைமுன்னர்த், திருப்பதிகத்தை ஓலையில் எழுதி வைகை
நதியின் மீது செலுத்த அதனை எதிர் நோக்கிச் செல்லுமாறு செய்த
கரத்தையுடையவர் சிவபெருமான். அவர் சைவர்கட்கு வந்த பழியும்,
பழிதூற்றலும் கெடுமாறு சமணர்களை அழித்தவர். நினைக்கவும்
முடியாதபடி சைவர்களின் புகழ் உலகம் முழுவதும் ஒலிக்கும்படி
செய்த வியப்பான செயல். திருக்கழுமலத்தில் வீற்றிருந்தருளும்
இறைவனின் அருளே. அவ்வருளைப் பெற்ற முத்தமிழ் விரகரது
பாடல்களை ஓதவல்லவர்கள் இடர் ஒழிதல் நிச்சயம்.

     கு-ரை: பருமதில் மதுரை மன் அவை எதிரே - பருத்த
மதில்களை உடைய மதுரை அரசன் சபையின் முன். பதிகம் அது
எழுது இலை அவை - பனை ஏடும் அதில் எழுதிய பாடலும்
ஆகியவைகள். (அவை - என்று பன்மையால் கூறினமையால்
இங்ஙனம் கூறப்பட்டது.) வருநதி இடை - வரும் வைகையாற்றில்,
மிசை - மேலே. எதிரே வரு - எதிரேவரச் செய்த. கரன் -
செய்கையை உடையவன். வரு - என்பதில் பிற வினை விகுதி
தொக்கு நின்றது. வசையொடும் அலர்கெட - சைவர்களுக்குவந்த
பழியும், பழிதூற்றலும் கெடுமாறு. அருகு அரன் சமணர்களை
அழித்தவன். அருகு - அருகர். அரன் - ஹரன்; அழித்தவன்.
கருதலில் - நினைக்கவும் முடியாதபடி. இசை - சைவர் அடைந்த
புகழ். முரல்தரும் - உலகம் முழுவதும் ஒலிக்கும்படி செய்த.
மருள்
- வியப்பு. கழுமலம் அமர் இறைதரும் அருளே - கழுமலத்தில்
எழுந்தருளியுள்ள சிவபெருமான் செய்த திருவருட்பெயருக்கே யாகும்.
மருவிய - அவ்வருளைப் பெற்ற. தமிழ் விரகன - முத்தமிழ் விரகரது. மொழி - இப்பாடல்களை. வல்லவர் - வல்லவர்களது. இடர் திடம்
ஒழி - இடர் ஒழிதல் நிச்சயம். ஒழி - முதனிலைத் தொழிற் பெயர்.