4031. பண்டரக்க னெடுத்த பலத்தையே
 

     பாய்ந்தரக்க னெடுத்த பலத்தையே
கொண்டரக்கிய துங்கால் விரலையே
     கோளரக்கிய துங்கால் விரலையே
 உண்டுழன்றது முண்டத் தலையிலே
     யுடுபதிக்கிட முண்டத் தலையிலே
கண்டநஞ்ச மடக்கினை கம்பமே
     கடவுணீயிடங் கொண்டது கம்பமே.      8

     8. பொ-ரை: சிவபெருமான், இராவணன் கைலைமலையை
எடுத்த வலிமையை, மேற்சென்ற சிதறுவித்தலால், அவன்
வலிமையற்றவன் என்பதை உணர்த்தும் வகையில் தம் திருப்பாத
விரலை ஊன்றியவர். தாருகவனத்து முனிவரேவலால் கொனை செய்ய
வந்த மானை ஏந்தியுள்ளவர். அவர் பிச்சையெடுத்துத் திரிந்தது தலை
மண்டையோட்டிலே. சந்திரனுக்கு இடம் கொடுத்தது அவர்
தலையிலே. நஞ்சைக் கண்டத்தில் அடக்கிய, உலகைத் தாங்கும்
தூண் போன்றவன் சிவபெருமானே. கடவுளாகிய அப்பெருமான்
விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே.

     கு-ரை: பண்டு, அரக்கன் - இராவணன். எடுத்த -
கயிலையையெடுத்த பலத்த வலிமையை. பாய்ந்து - மேற்சென்று.
அரக்கல் - சிதறுவித்தலால். நெடுத்த - மிக்க. அபலத்தையே -
வலியின்மையையே. கொண்டு - கொள்வித்து (பிறவினை விகுதி
குன்றியது) அரக்கியதும் - கால்விரலை அழுத்தியதும். கோள் -
முனிவரேவலால் கொலை செய்யும் பொருட்டு. அரக்கியது -
அடர்த்துவந்தமையை. கால்வும் - கக்கியதும் - (நீக்கியதும்)
இரலையே - மான்கன்றே என்றது முனிவர் வேள்வியினின்று
கொல்ல வந்த மான்கன்றை என்றது முனிவர் வேள்வியினின்று
கொல்ல வந்த மான்கன்றைக் கையிலேந்திய வரலாறு. உம்கால்
என்பதைக் கால் + உம் என்று மாற்றிக் கால்வும் என்க.
“தொட்டனைத் தூறும்” என்ற திருக்குறளிற்போல உம்மை பிரித்துக்
கூறப்பட்டது. உண்டு - பிச்சை யெடுத்துண்டு. உழன்றதும் -
திரிந்ததும். தலைமுண்டத்திலே - தலை மண்டையோட்டிலே. உடுபதி
- சந்திரன். அத்தலையில் - அந்தத்தலையில். இடம் உண்டு -
தங்குவதற்கு இடம் உண்டு. ஒரு கம்பமே - உலகைத் தாங்கும் தூண்
போன்ற சிவபெருமானே. கண்டம் - கழுத்து.