4037. காடுநீட துறப்பல கத்தனே
       காதலால்நினை வார்தம கத்தனே
பாடுபேயொடு பூதம சிக்கவே
     பல்பிணத்தசை நாடிய சிக்கவே
நீடுமாநட மாடவி ருப்பனே
     நின்னடித்தொழ நாளுமி ருப்பனே
ஆடனீள்சடை மேவிய வப்பனே
     யாலவாயினின் மேவிய வப்பனே,        3

     3. பொ-ரை: இறைவர், பெரிய சுடுகாட்டில் எல்லாவற்றிற்கும்
கர்த்தாவாயிருப்பவர். தம்மைப் பத்தியால் நினைவார்தம் உள்ளத்தில்
இருப்பவர். பாடுகின்ற பேய், மற்றும் பூதகணங்களுடன்
குழைந்திருப்பவர். அக்கணங்கள் பிணத்தசைகளை விரும்பியுண்ண
நடனம் ஆடுபவர். திரு வடிகளைத் தொழுபவர்கட்கு நாளும்
அருள்புரிபவர். அசைகின்ற சடைமீது கங்கையைத் தாங்கியுள்ளவர்.
திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தந்தை அவரே.

     கு-ரை: நீடது - பரவியதாகிய. காடு - சுடுகாடு. பலகத்தனே -
எல்லாவற்றிற்கும் கர்த்தாவாய் இருப்பவனே. அகத்தனே - மனத்தில்
இருப்பவனே. பூதம் - பூதகணங்கள். மசிக்க - குழைவித்து. பல
பிணத்தசை நாடி அசிக்கவே - பலபிணத்தினுடைய சதைகளை
விரும்பி உண்ண. நடமாடவிருப்பன் - திருக்கூத்தாடுதலில்
விருப்பமுடையவன். இருப்பான் - இருப்போன். ஆடல் -
அசைதலையுடைய. சடை மேவிய அப்பன் - சடையில் பொருந்திய
தண்ணீரை உடையவன். அப்பன் - சர்வலோகத்தந்தை.