4043. |
பங்கயத்துள
நான்முகன் மாலொடே |
|
பாதநீண்முடி
நேடிட மாலொடே
துங்கநற்றழ லின்னுரு வாயுமே
தூயபாடல் பயின்றது வாயுமே
செங்கயற்கணி னாரிடு பிச்சையே
சென்றுகொண்டுரை செய்வது பிச்சையே
அங்கியைத்திகழ் விப்ப திடக்கையே
யாலவாயர னார திடக்கையே. 9 |
9.
பொ-ரை: செந்தாமலை மலரில் வீற்றிருக்கும் பிரமன்
திருமாலோடு இறைவனின் அடியையும், முடியையும் தேட, அவர்கள்
மயங்க, உயர்ந்த நல்ல அக்கினி உருவாய் நின்றான். பின்னர்த்
தங்கள் பிழைகளை மன்னித்து அருளுமாறு தூய பாடல்களைப்
பாடின, அவர்கள் வாய். சிவந்த கயல்மீன்கள் போன்ற
கண்களையுடைய முனிபத்தினிகள் இறைவருக்கு இட்டது பிச்சையே.
அதனை ஏற்று அவர் உரைசெய்தது அவர்கட்குப் பித்து உண்டாகும்
வண்ணமே. அவர் நெருப்பேந்தியுள்ளது இடத் திருக்கரத்திலே.
திருஆலவாய் சிவபெருமான் திடமாக வீற்றிருந்தருளும் இடம்
ஆகும்.
கு-ரை:
மாலொடு - திருமாலொடு. நேடிட - தேட. மாலொடு
- மயக்கத்தோடு. துங்கம் நல் தழலின் உரு ஆயும் - உயர்ந்த நல்ல
அக்கினி வடிவமாயும். தூயபாடல் பயின்றது வாயுமே - அவருடைய
வாயும். தங்கள் பிழையை மன்னித்து அருள்புரியும்படி தூய
பாடல்களைப் பாடியது. செங்கயல் க(ண்)ணினார் - முனிவர்
பத்தினிகள். இடு - இட்ட. பிச்சை - பிச்சையை. சென்று - போய்.
கொண்டு - ஏற்று. உரை செய்வது - பேசுவது. பிச்சை -
அவர்களுக்குப் பித்து உண்டாக்கும் விதத்தையே.
|