4044. தேரரோடம ணர்க்குநல் கானையே
       தேவர்நாடொறுஞ் சேர்வது கானையே
கோரமட்டது புண்டரி கத்தையே
     கொண்டநீள்கழல் புண்டரி கத்தையே
நேரிலூர்க ளழித்தது நாகமே
     நீள்சடைத்திகழ் கின்றது நாகமே
ஆரமாக வுகந்தது மென்பதே
     யாலவாயர னாரிட மென்பதே.          10

     10. பொ-ரை: சிவபெருமான் தம்மைப் போற்றாத
புத்தர்கட்கும், சமணர்கட்கும் அருள்புரியாதவர். தேவர்கள்
நாள்தோறும் சென்று வணங்குவது அவர் எழுந்தருளியிருக்கும்
கடம்பவனத்தை. அவர் வெற்றிகொண்டு வீழ்த்தியது புலியையே.
திருமால் இறைவனைப் பூசித்துத் திருவடியில் சேர்த்தது தாமரை
மலர் போன்ற கண்ணையே. பகைமை கொண்ட மூன்று புரங்களை
அழித்தது மேருமலை வில்லே. பெருமானின் நீண்ட சடைமுடியில்
விளங்குவது நாகமே. இறைவன் மாலையாக விரும்பி அணிவது
எலும்பே. அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம்
திருஆலவாய் என்பதே.

     கு-ரை: நல்கானை - அருள்செய்யாதவனை. கானை - (கடம்ப)
வனத்தை. கோரம் அட்ட புண்டரிகத்தை - கொடும் தன்மையைக்
கொன்று ஒழித்தது புலியை. கொண்ட நீள்கழல் புண்டரிகத்தையே -
திருமால் இட்ட கண்ணாகிய தாமரைப்பூவை கொண்டன
திருவடிகளே.நேரில் ஊர்கள் அழித்தது நாகமே - தமக்கு
விரோதமாகிய திரிபுரத்து அசுரர் ஊர்களை அழித்த (மகாமேரு)
மலையாம். என்புஅது - எலும்பு. ஆரமாக உகந்தது - மாலையாக
விரும்பியது. அரனார் இடம் என்பது ஆலவாய்.