4064. |
நேணவராவிழ
யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா |
|
காழியுளாயரி
ளேதகவே யேழிசையாழவி ராவணனே. 8 |
8.
பொ-ரை: இறைவரின் திருவடிகளில் பேரன்பு செலுத்தும்
அடியவராம் பசுக்கள் தன்வயமற்றுக் கிடக்க, கட்டிய ஆசை என்று
சொல்லப்படும் பெருங்கயிற்றைத் தண்ணளியால் அவிழ்த்தருள்பவரே.
மிக வேகமாக ஓடும் மானின் தோலை அணிந்துள்ள பேரழகு
வாய்ந்தவரே. பொறுக்கலாகாத் தீவினைத் துன்பங்கள் தாக்க
வரும்போது காத்தருள்வீராக! மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின்
சிறுமைத் தன்மையால் செய்தனவாகலின் அவற்றைப் பெரியவாகக்
கொள்ளாது சிறியவாகக் கொண்டு பொறுத்தருள்வீராக! ஏழிசைவல்ல
இராவணன் செருக்கினால் செய்த பெரும்பிழையைத் தேவரீர்
மன்னித்து அருளினீர் அல்லவா? (அடியேம் சிறுமையால் செய்த
பிழையையும் மன்னித்தருளும் என்பது குறிப்பு).
கு-ரை:
நேணவராவிழயாசைழியே, நே, அணவர், ஆ, விழ,
யா, ஆசை, இழியே. நே அணவர் - (உமது திருவடியில்) நேயம்
பொருந்தும் அடியவராம், ஆ - பசுக்கள். விழ - தன் வயமற்றுக்
கிடக்க. யா - (யாத்த) கட்டிய, ஆசை - ஆசையாகிய கயிற்றை.
இழியே - அவிழ்த்து விடுபவனே. அடியவரைப் பசுவென்று,
ஆசையைக் கயிறென்னாமையால் ஏகதேச உருவகம். நேணவர் - நே
+ அணவர் எனவும், யாசைழியே - யா, அசை, இழியே எனவும் பதம்
பிரித்துக் கொள்க. யா + ஆசை = வினைத்தொகை; நேணவர் -
யாசைழியே இல்விரு தொடரும் மரூஉ முடிபின.
வேகதளேரியளாயுழிகா - வேக(ம்) அதரி ஏரி, அளாய உழி, கா.
வேகம் - விலங்குகளில் வேகமாய் ஓடவல்ல மானின், அதள்
தோலையணிந்த, ஏரி - அழகனே. (ஏர் - அழகு, இகர விகுதி.)
அளாய உழி - துன்பங்கள் எம்மைச் சூழ்ந்த விடத்து. கா -
காப்பாற்றுவாயாக. அளாய என்பற்கு வினை முதல் வருவித்து
உரைக்கப்பட்டது. காழியு(ள்)ளாய்! அரிளேதகவே. அரு, இளவு,
ஏது, அகவே. ஏதம் - குற்றம். அது கடைக் குறைந்து ஏது என
நின்றது. இளவு - சிறுமைத் தன்மை. இளப்பம், இளந்தலை,
இளக்காரம்,எனவும் வழங்கும். உகரம் - பண்புப்பெயர் விகுதி.
அஃகவே என்பது அகவே என நின்றது. அருஏதம் -
மன்னித்தற்கரிய குற்றங்கள். இளவு - (எமது) சிறுமைத்
தன்மையால் செய்தனவாதலின், அஃகவே - அவை மன்னிக்
கத்தக்கன ஆகுக. (அஃகுதல் - சுருங்குதல் இங்குக் குறைந்து
மன்னிக்கற்பாலது என்னும் பொருளில் வந்தது). ஏழிசை இராவணனே
- ஏழிசை பாடிய இராவணனுமல்லவா பெரும் பிழையும் மன்னிக்கப்
பெற்றுத் திருவருளுக்குப் பாத்திரமாயினான். யா -முன்னிலையசை.
செருக்கினால் செய்த பெரும் பிழையை மன்னித்த கருணை,
சிறுமையாற் செய்த பிழைகளை மன்னிக்கவும் தகும் என
மன்றாடிய வாறு.
|