4078. |
கானலங்
கழனி யோதம்வந் துலவுங் |
|
கழுமல
நகருறை வார்மேல்
ஞானசம் பந்த னற்றமிழ் மாலை
நன்மையா லுரைசெய்து நவில்வார்
ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி
யுள்ளமு மொருவழிக் கொண்டு
வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார்
மற்றிதற் காணையும் நமதே. 11 |
11.
பொ-ரை: கடற்கரைச் சோலைகளை அடுத்த வயல்களில்
கடல்நீர் வந்து பாய்தலையுடைய திருக்கழுமலம் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனைப் போற்றிப் பாடிய
ஞானசம்பந்தனுடைய நல்ல தமிழ்மாலைகளைப் பத்தியோடு பொருள்
உணர்ந்து பாடித் துதிப்பவர்கள் உடலுடன் தொடர்பு கொண்டதான
பிறவிப் பிணி நீங்கி, உள்ளம் ஒருமைப்பாட்டினையுடைய
சிவலோகத்தில் வாழ்வர். மீண்டும் நிலவுலகில் வந்து பிறவார். இதற்கு
ஆணையும் நம்முடையதே ஆகும்.
கு-ரை:
கானல் - கடற்கரைச்சோலை. கானல் கழனி என
வருவதால் கீழ்ப்பால் நெய்தல் நிலமும், ஏனைப்பால் மருதநிலமும்
உள்ளமை குறித்தவாறு.
|