4085. தன்றவம் பெரிய சலந்தர னுடலந்
       தடிந்தசக் கரமெனக் கருளென்
றன்றரி வழிபட் டிழிச்சிய விமானத்
     திறையவன் பிறையணி சடையன்
நின்றநாள் காலை யிருந்தநாண் மாலை
     கிடந்தமண் மேல்வரு கலியை
வென்றவே தியர்கள் விழாவறா வீழி
     மிழலையா னெனவினை கெடுமே.        7

     7. பொ-ரை: சிவபெருமான் திருவருளால் தோன்றிய
சக்கரப்படை சலந்தராசுரனை அழித்ததைக் கண்ட திருமால்,
அத்தகைய சக்கரப்படையைத் தனக்கு அருள வேண்டித்
தேவலோகத்திலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து சிவனைப்
பூசித்தார். சிவபெருமான் சந்திரனை அணிந்த சடையையுடையவர்.
அவர் வீற்றிருந்தருளும் இடமாவது எல்லாக் காலத்திலும்
மண்ணுலகத்தின் சேர்க்கையால் உண்டாகும் துன்பத்தை வென்ற
அந்தணர்கள் வாழ்கின்ற, திருவிழாக்கள் நீங்காத திருவீழிமிழலை
என்னும் திருத்தலமாகும். அத்திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
இறைவனுடைய திருநாமத்தை ஓத, வினை யாவும் நீங்கும்.

     கு-ரை: ஆலயத்திற்கு விண்ணிழி விமானம் என்று பெயர்.
அது திருமாலால் கொணர்ந்து தாபிக்கப்பெற்றது எனல் இரண்டாம்
அடியில் குறித்த பொருள்.