4092. செந்துவர் வாயாள் சேலன கண்ணாள்
 

     சிவன்றிரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி
     பணிசெயப் பாரிட நிலவும்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந்
     தண்ணெருக் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ண
     லாலவா யாவது மிதுவே.                3

     3. பொ-ரை: மங்கையர்க்கரசியார் சிவந்த பவளம் போன்ற
வாயையுடையவர். சேல் மீன் போன்ற கண்களை உடையவர்.
சிவபெருமானது திருநீற்றின் பெருமையை வளர்ப்பவர். விரல்நுனி
பந்து போன்று திரட்சியுடைய பாண்டிமா தேவியார் சிவத்தொண்டு
செய்ய, உலகில் சிறந்த நகராக விளங்குவதும், அழகிய முத்துக்கள்,
பாம்பு, கங்கை, ஊமத்தை, குளிர்ச்சி பொருந்திய எருக்க மலர்,
வன்னிமலர், மாலைநேரத்தில் தோன்றும் பிறைச்சந்திரன் இவற்றை
சடைமுடியில் அணிந்துள்ள தலைவரான சிவபெருமான்
வீற்றிருந்தருளுவது ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம்
இதுவேயாகும்.

     கு-ரை: பந்தணை விரலாள் - மகளிர் விரல் நுனியின்
திரட்சிக்குப் பந்தினை உவமை கூறுதல் மரபு