4098. மண்ணெலா நிகழ மன்னனாய் மன்னு
       மணிமுடிச் சோழன்றன் மகளாம்
பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி
     பாங்கினாற் பணிசெய்து பரவ
விண்ணுலா ரிருவர் கீழொடு மேலு
     மளப்பரி தாம்வகை நின்ற
அண்ணலா ருமையோ டின்புறு கின்ற
     வாலவா யாவது மிதுவே.               9

     9. பொ-ரை: உலகம் முழுவதும் தனது செங்கோல் ஆட்சி
நிகழ் மன்னனாய் விளங்கிய மணிமுடிச் சோழனின் மகளார்,
மங்கையர்க்கரசியார். பண்ணிசை போன்ற மொழியுடையவர்.
பாண்டிய மன்னனின் பட்டத்தரசியார். அத்தேவியார் அன்போடு
வழிபாடு செய்து போற்றுகின்ற, விண்ணிலுள்ள திருமாலும், பிரமனும்
கீழும் மேலுமாய்ச் சென்று இறைவனின் அடிமுடி தேட முயன்று
காண முடியாவண்ணம் அனற்பிழம்பாய் நின்ற சிவபெருமான்
உமாதேவியோடு மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும்
திருத்தலம் இதுவே.

     கு-ரை: மண்ணெலாம்நிகழ - உலகமுழுதும் ஒரு செங்கோல்
ஆட்சியின் கீழ் நடைபெற.