4135. சுரிகுழ னல்ல துடியிடை யோடு
  பொரிபுல்கு காட்டிடை யாடுதிர் பொங்க
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரிமழு வாட்படை யெந்தை பிரானே.          5

     5. பொ-ரை: விரிந்த பசுமையான சோலைகள் நிறைந்த திருக்
குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, நெருப்பு, மழு, வாள் முதலிய படைகளை
ஏந்தியுள்ள எம் தந்தையாகிய பெருமானே! நீர் அழகிய சுரிந்த
கூந்தலையும், உடுக்கை போன்ற இடையினையுமுடைய
உமாதேவியோடு, வெப்பத்தின் மிகுதியால் மரங்கள் முதலியவை
பொரிகின்ற சுடுகாட்டில், உலகுமீள உளதாக, ஆடுகின்றீர்.

     கு-ரை: (நல்ல) சுரிகுழல் துடியிடை - சுரிந்த கூந்தலையும்
உடுக்கை போன்ற இடையையும் உடைய அம்பிகை. அன்மொழித்
தொகை. பன்மொழித்தொடர். பொரிபுல்கு காட்டிடை - வெப்பத்தின்
மிகுதியால் மரங்கள் முதலியவை பொரி பொருந்திய சுடுகாடு.