03. திருப்புகலி - நாலடிமேல் வைப்பு - காந்தாரபஞ்சமம்
 
2823. இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம்
புயல் அன மிடறு உடைப் புண்ணியனே!
கயல் அன வரி நெடுங்கண்ணியொடும்
அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே!
கலன் ஆவது வெண்தலை; கடிபொழில் புகலி தன்னுள்,
நிலன் நாள்தொறும் இன்பு உற, நிறை மதி
                                                அருளினனே.     1
உரை
   
2824. நிலை உறும் இடர் நிலையாத வண்ணம்
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும், யாம்;
மலையினில் அரிவையை வெருவ, வன் தோல்
அலைவரு மதகரி உரித்தவனே!
இமையோர்கள் நின் தாள் தொழ, எழில் திகழ் பொழில் புகலி
உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே.     2
உரை
   
2825. பாடினை, அருமறை வரல்முறையால்;
ஆடினை, காண முன் அருவனத்தில்;
சாடினை, காலனை; தயங்கு ஒளி சேர்
நீடு வெண்பிறை முடி நின்மலனே!
நினையே அடியார் தொழ, நெடுமதில் புகலி(ந்)நகர்-
தனையே இடம் மேவினை; தவநெறி அருள், எமக்கே!     3
உரை
   
2826. நிழல் திகழ் மழுவினை! யானையின் தோல்
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே!
கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப, நல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே!
முடிமேல் மதி சூடினை! முருகு அமர் பொழில் புகலி
அடியார் அவர் ஏத்து உற, அழகொடும் இருந்தவனே!     4
உரை
   
2827. கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட
உரிமையின், உலகு உயிர் அளித்த நின்தன்
பெருமையை நிலத்தவர் பேசின் அல்லால்,
அருமையில் அளப்பு அரிது ஆயவனே!
அரவு ஏர் இடையாளொடும், அலைகடல் மலி புகலி,
பொருள் சேர்தர நாள்தொறும் புவிமிசைப்
                                                 பொலிந்தவனே!     5
உரை
   
2828. அடை அரிமாவொடு, வேங்கையின் தோல்,
புடை பட அரைமிசைப் புனைந்தவனே!
படை உடை நெடுமதில் பரிசு அழித்த,
விடை உடைக் கொடி மல்கு, வேதியனே!
விகிர்தா! பரமா! நின்னை விண்ணவர் தொழ, புகலித்
தகுவாய், மடமாதொடும், தாள் பணிந்தவர் தமக்கே.     6
உரை
   
2829. அடியவர் தொழுது எழ, அமரர் ஏத்த,
செடிய வல்வினை பல தீர்ப்பவனே!
துடி இடை அகல் அல்குல்-தூமொழியைப்
பொடி அணி மார்பு உறப் புல்கினனே!
புண்ணியா! புனிதா! புகர் ஏற்றினை! புகலிந்நகர்
நண்ணினாய்! கழல் ஏத்திட, நண்ணகிலா, வினையே.     7
உரை
   
2830. இரவொடு, பகல் அது, ஆம் எம்மான்! உன்னைப்
பரவுதல் ஒழிகிலேன், வழி அடியேன்;
குர, விரி நறுங்கொன்றை, கொண்டு அணிந்த
அர விரிசடை முடி ஆண்டகையே!
அனமென் நடையாளொடும், அதிர்கடல் இலங்கை மன்னை
இனம் ஆர்தரு தோள் அடர்த்து, இருந்தனை,
                                                     புகலியுளே.     8
உரை
   
2831. உருகிட உவகை தந்து உடலினுள்ளால்,
பருகிடும் அமுது அன பண்பினனே!
பொரு கடல் வண்ணனனும் பூ உளானும்
பெருகிடும் மருள் எனப் பிறங்கு எரி ஆய்
உயர்ந்தாய்! இனி, நீ எனை ஒண்மலர் அடி இணைக்கீழ்
வயந்து ஆங்கு உற நல்கிடு, வளர்மதில் புகலி மனே!     9
உரை
   
2832. கையினில் உண்பவர், கணிகநோன்பர்,
செய்வன தவம் அலாச் செதுமதியார்,
பொய்யவர் உரைகளைப் பொருள் எனாத
மெய்யவர் அடி தொழ விரும்பினனே!
வியந்தாய், வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி
உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்கு உடன்
                                               இருந்தவனே!     10
உரை
   
2833. புண்ணியர் தொழுது எழு புகலி(ந்) நகர்,
விண்ணவர் அடி தொழ விளங்கினானை,
நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும் வல்லார்,
நடலை அவை இன்றிப் போய் நண்ணுவர், சிவன் உலகம்;
இடர் ஆயின இன்றித் தாம் எய்துவர், தவநெறியே.     11
உரை