06. திருக்கொள்ளம்பூதூர் - ஈரடிமேல் வைப்பு - காந்தாரபஞ்சமம்
 
2856. கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!     1
உரை
   
2857. கோட்டகக் கழனிக் கொள்ளம்பூதூர்
நாட்டு அகத்து உறை நம்பனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!     2
உரை
   
2858. குலையின் ஆர் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர்
விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!     3
உரை
   
2859. குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர்த்
தவள நீறு அணி தலைவனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!     4
உரை
   
2860. கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர்
நின்ற புன்சடை நிமலனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!     5
உரை
   
2861. ஓடம் வந்து அணையும் கொள்ளம்பூதூர்
ஆடல் பேணிய அடிகளை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!     6
உரை
   
2862. ஆறு வந்து அணையும் கொள்ளம்பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!     7
உரை
   
2863. குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர்
அரக்கனைச் செற்ற ஆதியை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!     8
உரை
   
2864. பரு வரால் உகளும் கொள்ளம்பூதூர்
இருவர் காண்பு அரியான் கழல் உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!     9
உரை
   
2865. நீர் அகக் கழனிக் கொள்ளம்பூதூர்த்
தேர் அமண் செற்ற செல்வனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!     10
உரை
   
2866. கொன்றை சேர் சடையான் கொள்ளம்பூதூர்,
நன்று காழியுள் ஞானசம்பந்தன்
இன்று சொல் மாலை கொண்டு ஏத்த வல்லார், போய்,
என்றும் வானவரோடு இருப்பாரே.     11
உரை