07. திருப்புகலி - காந்தாரபஞ்சமம்
 
2867. கண் நுதலானும், வெண் நீற்றினானும், கழல் ஆர்க்கவே
பண் இசை பாட நின்று ஆடினானும், பரஞ்சோதியும்
புண்ணிய நால்மறையோர்கள் ஏத்தும் புகலி(ந்) நகர்,
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான்
                                                          அன்றே!     1
உரை
   
2868. சாம்பலோடும் தழல் ஆடினானும், சடையின் மிசைப்
பாம்பினோடும் மதி சூடினானும், பசு ஏறியும்
பூம் படுகல்(ல்) இள வாளை பாயும் புகலி(ந்) நகர்,
காம்பு அன தோளியோடும்(ம்) இருந்த கடவுள் அன்றே!     2
உரை
   
2869. கருப்பு நல் வார் சிலைக் காமன் வேவக் கடைக்கண்டானும்,
மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும்
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி(ந்) நகர்,
விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே!     3
உரை
   
2870. அங்கை இலங்கு அழல் ஏந்தினானும், அழகு ஆகவே
கங்கையைச் செஞ்சடை சூடினானும், கடலின்(ன்) இடைப்
பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி(ந்) நகர்
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே.     4
உரை
   
2871. சாம நல்வேதனும், தக்கன் தன் வேள்வி தகர்த்தானும்,
நாமம் நூறு-ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும்
பூ மல்கு தண்பொழில் மன்னும் அம் தண் புகலி(ந்)நகர்,
கோமளமாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே!     5
உரை
   
2872. இரவு இடை ஒள் எரி ஆடினானும், இமையோர் தொழச்
செரு இடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும்,
பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி(ந்)நகர்,
அரவு இடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே!     6
உரை
   
2873. சேர்ப்பது திண் சிலை மேவினானும், திகழ் பாலன்மேல்
வேர்ப்பது செய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்விப்புகை
போர்ப்பது செய்து அணி மாடம் ஓங்கும் புகலி(ந்) நகர்,
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே!     7
உரை
   
2874. கல்-நெடுமால் வரைக்கீழ் அரக்கன்(ன்) இடர் கண்டானும்,
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு
பொன் நெடுங்கோல் கொடுத்தானும் தண் புகலி(ந்)நகர்,
அன்னம் அன்ன(ந்) நடை மங்கையொடும் அமர்ந்தான்
                                                            அன்றே!     8
உரை
   
2875. பொன்நிற நான்முகன், பச்சையான், என்று இவர் புக்குழித்
தன்னை இன்னான் எனக் காண்பு அரிய தழல்சோதியும்
புன்னை பொன்தாது உதிர் மல்கும் அம் தண் புகலி(ந்) நகர்,
மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே!     9
உரை
   
2876. பிண்டியும் போதியும் பேணுவார் பேணைப் பேணாதது ஓர்,
தொண்டரும் காதல்செய், சோதி ஆய சுடர்ச்சோதியான்-
புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புகலி(ந்) நகர்,
வண்டு அமர் கோதையொடும்(ம்) இருந்த
                                                 மணவாளனே.     10
உரை
   
2877. பூங் கமழ் கோதையொடும்(ம்) இருந்தான், புகலி(ந்) நகர்ப்
பாங்கனை, ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை,
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக, இசை வல்லவர்,
ஓங்கு அமராவதியோர் தொழச் செல்வதும் உண்மையே.     11
உரை