18. திருவைகல்மாடக்கோயில் - காந்தாரபஞ்சமம்
 
2987. துள மதி உடை மறி தோன்று கையினர்
இளமதி அணி சடை எந்தையார், இடம்
உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய,
வள மதி தடவிய, மாடக்கோயிலே.      1
உரை
   
2988. மெய் அகம் மிளிரும் வெண்நூலர், வேதியர்
மைய கண் மலைமகளோடும் வைகு இடம்
வையகம் மகிழ்தர, வைகல் மேல்-திசை
செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே.     2
உரை
   
2989. கணி அணி மலர்கொடு, காலை மாலையும்
பணி அணிபவர்க்கு அருள் செய்த பான்மையர்,
தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம்
மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே.     3
உரை
   
2990. கொம்பு இயல் கோதை முன் அஞ்ச, குஞ்சரத்-
தும்பி அது உரி செய்த துங்கர் தங்கு இடம்
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல்-திசை,
செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே.     4
உரை
   
2991. விடம் அடை மிடற்றினர், வேத நாவினர்
மடமொழி மலைமகளோடும் வைகு இடம்
மட அனம் நடை பயில் வைகல் மா நகர்க்
குட திசை நிலவிய மாடக்கோயிலே.     5
உரை
   
2992. நிறை புனல் பிறையொடு நிலவு நீள்சடை
இறையவர் உறைவு இடம் இலங்கு மூஎரி
மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில்,
திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே.     6
உரை
   
2993. எரிசரம் வரிசிலை வளைய ஏவி, முன்
திரிபுரம் எரி செய்த செல்வர் சேர்வு இடம்
வரி வளையவர் பயில் வைகல் மேல்-திசை,
வரு முகில் அணவிய மாடக்கோயிலே.     7
உரை
   
2994. மலை அன இருபது தோளினான் வலி
தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம்
மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள்
வலம் வரு மலை அன மாடக்கோயிலே.     8
உரை
   
2995. மாலவன், மலரவன், நேடி மால் கொள
மால் எரி ஆகிய வரதர் வைகு இடம்
மாலைகொடு அணி மறைவாணர் வைகலில்,
மால் அன மணி அணி மாடக்கோயிலே.     9
உரை
   
2996. கடு உடை வாயினர், கஞ்சி வாயினர்
பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம்
மடம் உடையவர் பயில் வைகல் மா நகர்
வடமலை அனைய நல் மாடக்கோயிலே.     10
உரை
   
2997. மைந்தனது இடம் வைகல் மாடக்கோயிலை,
சந்து அமர் பொழில் அணி சண்பை ஞானசம்-
பந்தன தமிழ் கெழு பாடல் பத்து இவை
சிந்தை செய்பவர், சிவலோகம் சேர்வரே.     11
உரை