20. திருப்பூவணம் - காந்தாரபஞ்சமம்
 
3009. மாது அமர் மேனியன் ஆகி, வண்டொடு
போது அமர் பொழில் அணி பூவணத்து உறை
வேதனை, விரவலர் அரணம் மூன்று எய்த
நாதனை, அடி தொழ, நன்மை ஆகுமே.     1
உரை
   
3010. வான் அணி மதி புல்கு சென்னி, வண்டொடு
தேன் அணி பொழில்-திருப் பூவணத்து உறை,
ஆன நல் அருமறை அங்கம் ஓதிய,
ஞானனை அடி தொழ, நன்மை ஆகுமே.     2
உரை
   
3011. வெந்துயர், உறு பிணி, வினைகள், தீர்வது ஓர்
புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை,
அந்தி வெண்பிறையினோடு ஆறு சூடிய,
நந்தியை அடி தொழ, நன்மை ஆகுமே.     3
உரை
   
3012. வாச நல் மலர் மலி மார்பில் வெண்பொடிப்
பூசனை, பொழில் திகழ் பூவணத்து உறை
ஈசனை, மலர் புனைந்து ஏத்துவார் வினை
நாசனை, அடி தொழ, நன்மை ஆகுமே.     4
உரை
   
3013. குருந்தொடு, மாதவி, கோங்கு, மல்லிகை,
பொருந்திய பொழில்-திருப் பூவணத்து உறை,
அருந் திறல் அவுணர்தம் அரணம் மூன்று எய்த,
பெருந்தகை அடி தொழ, பீடை இல்லையே.     5
உரை
   
3014. வெறி கமழ் புன்னை, பொன்ஞாழல், விம்மிய
பொறி அரவு அணி பொழில் பூவணத்து உறை
கிறிபடும் உடையினன், கேடு இல் கொள்கையன்,
நறு மலர் அடி தொழ, நன்மை ஆகுமே.     6
உரை
   
3015. பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன்,
பொறை மல்கு பொழில் அணி பூவணத்து உறை
மறை மல்கு பாடலன், மாது ஒர் கூறினன்,
அறை மல்கு கழல் தொழ, அல்லல் இல்லையே.     7
உரை
   
3016. வரை தனை எடுத்த வல் அரக்கன் நீள
விரல்தனில் அடர்த்தவன், வெள்ளை நீற்றினன்,
பொரு புனல் புடை அணி பூவணம் தனைப்
பரவிய அடியவர்க்கு இல்லை, பாவமே.     8
உரை
   
3017. நீர் மல்கு மலர் உறைவானும், மாலும் ஆய்,
சீர் மல்கு திருந்து அடி சேரகிற்கிலர்;
போர் மல்கு மழுவினன் மேய பூவணம்,
ஏர் மல்கு மலர் புனைந்து, ஏத்தல் இன்பமே.     9
உரை
   
3018. மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும்,
குண்டரும், குணம் அல பேசும் கோலத்தர்;
வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம்
கண்டவர் அடி தொழுது ஏத்தல் கன்மமே.     10
உரை
   
3019. புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை
அண்ணலை அடி தொழுது, அம் தண் காழியுள
நண்ணிய அருமறை ஞானசம்பந்தன்
பண்ணிய தமிழ் சொல, பறையும், பாவமே.     11
உரை