24. திருக்கழுமலம் - கொல்லி
 
3052. மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்;
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!     1
உரை
   
3053. போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்
தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்;
காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!     2
உரை
   
3054. தொண்டு அணைசெய் தொழில்-துயர் அறுத்து உய்யல் ஆம்
வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி;
கண் துணை நெற்றியான்; கழுமல வள நகர்
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே!     3
உரை
   
3055. “அயர்வு உளோம்!” என்று நீ அசைவு ஒழி, நெஞ்சமே!
நியர் வளை முன்கையாள் நேரிழை அவளொடும்,
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர்
பெயர் பல துதிசெய, பெருந்தகை இருந்ததே!     4
உரை
   
3056. “அடைவு இலோம்” என்று நீ அயர்வு ஒழி, நெஞ்சமே!
விடை அமர் கொடியினான், விண்ணவர் தொழுது எழும்,
கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர்
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!     5
உரை
   
3057. மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைப
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர்,
சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும்
பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே!     6
உரை
   
3058. குறை வளைவது மொழி குறைவு ஒழி, நெஞ்சமே!
நிறை வளை முன்கையாள் நேரிழை அவளொடும்,
கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர்
பிறை வளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே!     7
உரை
   
3059. அரக்கனார் அரு வரை எடுத்தவன்-அலறிட,
நெருக்கினார், விரலினால்; நீடு யாழ் பாடவே,
கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வள நகர்
பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே!     8
உரை
   
3060. நெடியவன், பிரமனும், நினைப்பு அரிது ஆய், அவர்
அடியொடு முடி அறியா அழல் உருவினன்;
கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர்
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!      9
உரை
   
3061. தார் உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள் தம்
ஆர் உறு சொல் களைந்து, அடி இணை அடைந்து உய்ம்மின்!
கார் உறு பொழில் வளர் கழுமல வள நகர்
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே!     10
உரை
   
3062. கருந் தடந் தேன் மல்கு கழுமல வள நகர்ப்
பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனை
அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள், போய், விண்ணுலகு ஆள்வரே.     11
உரை