27. திருச்சக்கரப்பள்ளி - கொல்லி
 
3085. படையினார், வெண்மழு; பாய் புலித்தோல் அரை
உடையினார்; உமை ஒரு கூறனார்; ஊர்வது ஓர்
விடையினார்; வெண்பொடிப் பூசியார்; விரிபுனல்
சடையினார்; உறைவு இடம் சக்கரப்பள்ளியே.     1
உரை
   
3086. பாடினார், அருமறை; பனிமதி சடைமிசைச்
சூடினார், படுதலை துன் எருக்கு அதனொடும்;
நாடினார், இடு பலி; நண்ணி ஓர் காலனைச்
சாடினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.     2
உரை
   
3087. மின்னின் ஆர் சடைமிசை விரி கதிர் மதியமும்,
பொன்னின் ஆர் கொன்றையும், பொறி கிளர் அரவமும்,
துன்னினார்; உலகு எலாம் தொழுது எழ நால்மறை
தன்னினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.     3
உரை
   
3088. நலம் மலி கொள்கையார், நால்மறை பாடலார்
வலம் மலி மழுவினார், மகிழும் ஊர் வண்டு அறை
மலர் மலி சலமொடு வந்து இழி காவிா
சலசல மணி கொழி சக்கரப்பள்ளியே.     4
உரை
   
3089. வெந்த வெண் பொடி அணி வேதியர், விரிபுனல்,
அந்தம் இல் அணி மலைமங்கையோடு, அமரும் ஊர்
கந்தம் ஆர் மலரொடு, கார் அகில், பல்மணி,
சந்தினோடு, அணை புனல் சக்கரப்பள்ளியே.     5
உரை
   
3090. பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார், வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார், உமை ஒரு கூறொடும் ஒலி புனல்
தாங்கினார், உறைவு இடம் சக்கரப்பள்ளியே.     6
உரை
   
3091. பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம்-
பேரினார்; பெண் ஒரு கூறனார்; பேர் ஒலி-
நீரினார், சடைமுடி; நிரை மலர்க்கொன்றை அம்-
தாரினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.     7
உரை
   
3092. முதிர் இலா வெண்பிறை சூடினார்; முன்ன நாள
எதிர் இலா முப்புரம் எரிசெய்தார், வரைதனால்;
அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய
சதிரினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.     8
உரை
   
3093. துணி படு கோவணம், சுண்ண வெண் பொடியினர்
பணி படு மார்பினர், பனிமதிச் சடையினர்,
மணிவணன் அவனொடு மலர் மிசையானையும்
தணிவினர், வள நகர் சக்கரப்பள்ளியே.     9
உரை
   
3094. உடம்பு போர் சீவரர், ஊண்தொழில் சமணர்கள்
விடம் படும் உரை அவை மெய் அல; விரிபுனல்
வடம் படு மலர்கொடு வணங்குமின், வைகலும்,
தடம் புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே!     10
உரை
   
3095. தண்வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம்
கண் நுதலவன் அடி, கழுமல வள நகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல்
பண்ணிய இவை சொல, பறையும், மெய்ப் பாவமே.     11
உரை