28. திருமழபாடி - கொல்லி
 
3096. காலை ஆர் வண்டு இனம் கிண்டிய, கார் உறும்,
சோலை ஆர் பைங்கிளி சொல் பொருள் பயிலவே,
வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம்
மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே.     1
உரை
   
3097. கறை அணி மிடறு உடைக் கண்ணுதல், நண்ணிய
பிறை அணி செஞ்சடைப் பிஞ்ஞகன், பேணும் ஊர்
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே,
மறை அணி நாவினான் மா மழபாடியே.     2
உரை
   
3098. அந்தணர் வேள்வியும், அருமறைத் துழனியும்,
செந்தமிழ்க் கீதமும், சீரினால் வளர்தர,
பந்து அணை மெல்விரலாளொடும் பயில்வு இடம்
மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே.     3
உரை
   
3099. அத்தியின் உரிதனை அழகு உறப் போர்த்தவன்;
முத்தி ஆய் மூவரில் முதல்வனாய் நின்றவன்;
பத்தியால் பாடிட, பரிந்து அவர்க்கு அருள்செயும்
அத்தனார்; உறைவு இடம் அணி மழபாடியே.     4
உரை
   
3100. கங்கை ஆர் சடை இடைக் கதிர் மதி அணிந்தவன்,
வெங் கண் வாள் அரவு உடை வேதியன், தீது இலாச்
செங்கயல் கண் உமையாளொடும் சேர்வு இடம்
மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே.      5
உரை
   
3101. பாலனார் ஆர் உயிர் பாங்கினால் உண வரும்
காலனார் உயிர் செகக் காலினால் சாடினான்,
சேலின் ஆர் கண்ணினாள் தன்னொடும் சேர்வு இடம்
மாலினார் வழிபடும் மா மழபாடியே.     6
உரை
   
3102. விண்ணில் ஆர் இமையவர் மெய்ம் மகிழ்ந்து ஏத்தவே,
எண் இலார் முப்புரம் எரியுண, நகைசெய்தார்
கண்ணினால் காமனைக் கனல் எழக் காய்ந்த எம்
அண்ணலார்; உறைவு இடம் அணி மழபாடியே.     7
உரை
   
3103. கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கன
சிரத்தினை ஊன்றலும், சிவன் அடி சரண் எனா,
இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும்,
வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே.     8
உரை
   
3104. ஏடு உலாம் மலர்மிசை அயன், எழில் மாலும் ஆய்,
நாடினார்க்கு அரிய சீர் நாதனார் உறைவு இடம்
பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ, பைம்பொழில்
மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே.     9
உரை
   
3105. உறி பிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறி பிடித்து, அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்மின்!
பொறி பிடித்த(அ)ரவு இனம் பூண் எனக் கொண்டு, மாந்
மறி பிடித்தான் இடம் மா மழபாடியே.     10
உரை
   
3106. ஞாலத்து ஆர் ஆதிரை நாளினான், நாள்தொறும்
சீலத்தான், மேவிய திரு மழபாடியை
ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல்
கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே.     11
உரை