35. திருத் தென்குடித்திட்டை - கொல்லி
 
3170. முன்னை நால் மறை அவை முறை முறை, குறையொடும்,
தன்ன தாள் தொழுது எழ நின்றவன் தன் இடம்
மன்னு மா காவிரி வந்து அடி வருட, நல்
செந்நெல் ஆர் வளவயல்-தென்குடித்திட்டையே.     1
உரை
   
3171. மகரம் ஆடும் கொடி மன் மத வேள் தனை,
நிகரல் ஆகா நெருப்பு எழ, விழித்தான் இடம்
பகர வாள் நித்திலம், பல்மகரத்தோடும்,
சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே.     2
உரை
   
3172. கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன்,
உருவினால் அன்றியே உருவு செய்தான், இடம்
பருவ நாள், விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினால் மிகு புகழ்த் தென்குடித்திட்டையே.     3
உரை
   
3173. உள்-நிலாவு ஆவி ஆய் ஓங்கு தன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர்
எண் இல் ஆர் எழில் மணிக் கனக மாளிகை இளந்
தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே.     4
உரை
   
3174. வருந்தி வானோர்கள் வந்து அடைய, மா நஞ்சு தான்
அருந்தி, ஆர் அமுது அவர்க்கு அருள் செய்தான் அமரும் ஊர்
செருந்தி, பூமாதவிப் பந்தர், வண் செண்பகம்,
திருந்து நீள் வளர் பொழில்-தென்குடித்திட்டையே.     5
உரை
   
3175. ஊறினார், ஓசையுள் ஒன்றினார், ஒன்றி மால்
கூறினார், அமர்தரும் குமரவேள்தாதை ஊர்
ஆறினார் பொய் அகத்து, ஐஉணர்வு எய்தி மெய்
தேறினார், வழிபடும் தென்குடித்திட்டையே.     6
உரை
   
3176. கான் அலைக்கும்(ம்) அவன் கண் இடந்து அப்ப, நீள
வான் அலைக்கும் தவத் தேவு வைத்தான் இடம்
தான் அலைத் தெள் அம் ஊர், தாமரைத் தண்துறை
தேன் அலைக்கும் வயல், தென்குடித்திட்டையே.     7
உரை
   
3177. மாலொடும் பொரு திறல் வாள் அரக்கன் நெரிந்து
ஓல் இடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம்
காலொடும் கனகமூக்கு உடன்வர, கயல் வரால்
சேலொடும் பாய் வயல்-தென்குடித்திட்டையே.     8
உரை
   
3178. நாரணன் தன்னொடு நான்முகன்தானும் ஆய்,
காரணன்(ன்) அடி முடி காண ஒண்ணான் இடம்
ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ,
சீர் அணங்கும் புகழ்த் தென்குடித்திட்டையே.     9
உரை
   
3179. குண்டிகைக் கை உடைக் குண்டரும், புத்தரும்,
பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர், தொழும்
வண்டு இரைக்கும் பொழில்-தண்டலைக் கொண்டல் ஆர்
தெண்திரைத் தண்புனல்,-தென்குடித்திட்டையே!     10
உரை
   
3180. தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை,
கானல் ஆர் கடிபொழில் சூழ்தரும் காழியுள
ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ்
பால் நல் ஆர் மொழி வலார்க்கு, இல்லை ஆம்,
                                                   பாவமே.     11
உரை