45. திருஆரூர் - கௌசிகம்
 
3277. அந்தம் ஆய், உலகு ஆதியும் ஆயினான்,
வெந்த வெண் பொடிப் பூசிய வேதியன்,
சிந்தையே புகுந்தான்-திரு ஆரூர் எம்
எந்தைதான்; எனை ஏன்று கொளும்கொலோ?     1
உரை
   
3278. கருத்தனே! கருதார் புரம் மூன்று எய்த
ஒருத்தனே! உமையாள் ஒருகூறனே!
திருத்தனே! திரு ஆரூர் எம் தீவண்ண!
அருத்த! என், எனை “அஞ்சல்!” என்னாததே?      2
உரை
   
3279. மறையன், மா முனிவன், மருவார் புரம்
இறையின் மாத்திரையில்(ல்) எரியூட்டினான்,
சிறைவண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம்
இறைவன்தான், எனை ஏன்றுகொளும் கொலோ?     3
உரை
   
3280. பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரிந்து
எல்லி வந்து, இடுகாட்டு எரி ஆடுவான்-
செல்வம் மல்கிய தென்திரு ஆரூரான்;
அல்லல் தீர்த்து, எனை, “அஞ்சல்!” எனும்கொலோ?     4
உரை
   
3281. குருந்தம் ஏறிக் கொடிவிடு மாதவி,
விரிந்து அலர்ந்த விரை கமழ் தேன் கொன்றை,
திருந்து மாடங்கள் சூழ் திரு ஆரூரான்-
வருந்தும்போது எனை, “வாடல்!” எனும்கொலோ?     5
உரை
   
3282. வார் கொள் மென்முலையாள் ஒரு பாகமா,
ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன்-
சீர் கொள் மாடங்கள் சூழ் திரு ஆரூரான்;
ஆர்கணா, எனை, “அஞ்சல்!” எனாததே?     6
உரை
   
3283. வளைக்கை மங்கை நல்லாளை ஓர்பாகமா,
துளைக்கையானை துயர் படப் போர்த்தவன்-
திளைக்கும் தண் புனல் சூழ் திரு ஆரூரான்;
இளைக்கும்போது, எனை ஏன்று கொளும்கொலோ?     7
உரை
   
3284. இலங்கை மன்னன் இருபதுதோள் இறக்
கலங்க, கால்விரலால், கடைக் கண்டவன்-
வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான்;
அலங்கல் தந்து, எனை, “அஞ்சல்!” எனும்கொலோ?     8
உரை
   
3285. நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
படியவன், பனி மா மதிச் சென்னியான்-
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம்
அடிகள் தான்; எனை, “அஞ்சல்!” எனும்கொலோ?     9
உரை
   
3286. மாசு மெய்யினர், வண் துவர் ஆடை கொள
காசை போர்க்கும் கலதிகள், சொல் கொளேல்!
தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம்
ஈசன்தான் எனை ஏன்று கொளும்கொலோ?      10
உரை
   
3287. வன்னி, கொன்றை, மதியொடு, கூவிளம்,
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை,
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய்ப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை, பாவமே.     11
உரை