47. திருஆலவாய் - கௌசிகம்
 
3298. காட்டு மா அது உரித்து, உரி போர்த்து உடல்,
நாட்டம் மூன்று உடையாய்! உரைசெய்வன், நான்;
வேட்டு, வேள்வி செய்யா அமண்கையரை
ஓட்டி வாது செயத் திரு உள்ளமே?     1
உரை
   
3299. மத்தயானையின் ஈர் உரி மூடிய
அத்தனே! அணி ஆலவாயாய்! பணி
பொய்த்த வன் தவ வேடத்தர் அம் சமண்
சித்தரை அழிக்கத் திரு உள்ளமே?      2
உரை
   
3300. மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம்
திண்ணகத் திரு ஆலவாயாய்! அருள்
பெண் அகத்து எழில் சாக்கியப்பேய், அமண்-
தெண்ணர் கற்பு அழிக்கத் திரு உள்ளமே?      3
உரை
   
3301. ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?
ஆதியே! திரு ஆலவாய் அண்ணல்!
நீதி ஆக நினைந்து, அருள்செய்திடே!      4
உரை
   
3302. வையம் ஆர் புகழாய்! அடியார் தொழும்
செய்கை ஆர் திரு ஆலவாயாய்! செப்பாய்
கையில் உண்டு உழலும் அமண்கையரைப்
பைய வாது செயத் திரு உள்ளமே?     5
உரை
   
3303. நாறு சேர் வயல்-தண்டலை மிண்டிய
தேறல் ஆர் திரு ஆலவாயாய்! செப்பாய்
வீறு இலாத் தவ மோட்டு அமண்வேடரைச்
சீறி, வாது செயத் திரு உள்ளமே?      6
உரை
   
3304. பண்டு அடித்தவத்தார் பயில்வால்-தொழும்
தொண்டருக்கு எளியாய்! திரு ஆலவாய்
அண்டனே! அமண் கையரை வாதினில்
செண்டு அடித்து, உளறத் திரு உள்ளமே?      7
உரை
   
3305. அரக்கன் தான் கிரி ஏற்றவன் தன் முடிச்
செருக்கினைத் தவிர்த்தாய்! திரு ஆலவாய்
பரக்கும் மாண்பு உடையாய்! அமண்பாவரை,
கரக்க, வாதுசெயத் திரு உள்ளமே?      8
உரை
   
3306. மாலும் நான்முகனும்(ம்) அறியா நெறி
ஆலவாய் உறையும்(ம்) அண்ணலே! பணி
மேலைவீடு உணரா வெற்று அரையரைச்
சால வாது செயத் திரு உள்ளமே?      9
உரை
   
3307. கழிக் கரைப் படு மீன் கவர்வார் அமண்-
அழிப்பரை அழிக்கத் திரு உள்ளமே?
தெழிக்கும் ம்புனல் சூழ் திரு ஆலவாய்
மழுப்படை உடை மைந்தனே! நல்கிடே!      10
உரை
   
3308. “செந்து எனா முரலும் திரு ஆலவாய்
மைந்தனே!” என்று, வல் அமண் ஆசு அற,
சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய்ஞ் ஞானசம்-
பந்தன் சொல் பகரும், பழி நீங்கவே!      11
உரை