49. பொது - நமச்சிவாயத் திருப்பதிகம் - கௌசிகம்
 
3320. காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.      1
உரை
   
3321. நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்,
வம்பு நாள்மலர் வார் மது ஒப்பது;
செம்பொன் ஆர் திலகம், உலகுக்கு எலாம்;
நம்பன் நாமம் நமச்சிவாயவே.      2
உரை
   
3322. நெக்கு உள், ஆர்வம் மிகப் பெருகி(ந்) நினைந்து
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே.     3
உரை
   
3323. இயமன் தூதரும் அஞ்சுவர், இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்;
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன், நாமம் நமச்சிவாயவே.      4
உரை
   
3324. கொல்வாரேனும், குணம் பல நன்மைகள்
இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின்,
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லான் நாமம் நமச்சிவாயவே.      5
உரை
   
3325. மந்தரம்(ம்) அன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்,
சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.      6
உரை
   
3326. நரகம் ஏழ் புக நாடினர் ஆயினும்,
உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்-
வரதன் நாமம் நமச்சிவாயவே.      7
உரை
   
3327. இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலம் கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்,
மலங்கி, வாய்மொழி செய்தவன் உய் வகை
நலம் கொள் நாமம் நமச்சிவாயவே.      8
உரை
   
3328. போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன்
பாதம் தான் முடி நேடிய பண்பராய்,
ஆதும் காண்பு அரிது ஆகி, அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.      9
உரை
   
3329. கஞ்சி மண்டையர், கையில் உண் கையர்கள்
வெஞ் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்-
விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுது செய்
நஞ்சு உள் கண்டன் நமச்சிவாயவே.      10
உரை
   
3330. “நந்தி நாமம் நமச்சிவாய!” எனும்
சந்தையால்,-தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே.      11
உரை