51. திருஆலவாய் - கௌசிகம்
 
3339. செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!      1
உரை
   
3340. சித்தனே! திரு ஆலவாய் மேவிய
அத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!      2
உரை
   
3341. தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
சொக்கனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே!      3
உரை
   
3342. சிட்டனே! திரு ஆலவாய் மேவிய
அட்டமூர்த்தியனே! “அஞ்சல்!” என்று அருள்
துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பட்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!      4
உரை
   
3343. நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எண் இலா அமணர் கொளுவும் சுடர்
பண் இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே!      5
உரை
   
3344. “தஞ்சம்!” என்று உன் சரண் புகுந்தேனையும்,
“அஞ்சல்!” என்று அருள், ஆலவாய் அண்ணலே!
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!      6
உரை
   
3345. செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய்
அங்கணா! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
கங்குலார் அமண்கையர் இடும் கனல்,
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே!      7
உரை
   
3346. தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய்
ஆத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!      8
உரை
   
3347. தாவினான், அயன்தான் அறியா வகை
மேவினாய்! திரு ஆலவாயாய், அருள்
தூ இலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான், தென்னன், பாண்டியற்கு ஆகவே!      9
உரை
   
3348. எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!      10
உரை
   
3349. அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால்,
வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும்,
செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே.     11
உரை