61. திருவெண்டுறை - பஞ்சமம்
 
3449. ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய ஆர் அழகன்,
பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்,
போது இயலும் முடிமேல் புனலோடு அரவம் புனைந்த
வேதியன், மாதிமையால் விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. 1
உரை
   
3450. காலனை ஓர் உதையில் உயிர் வீடு செய் வார்கழலான்;
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன்;
மாலை மதியொடு, நீர், அரவம், புனை வார்சடையான்;
வேல் அன கண்ணியொடும், விரும்பும்(ம்) இடம்
                                           வெண்டுறையே.         2
உரை
   
3451. படை நவில் வெண்மழுவான், பல பூதப்படை உடையான்,
கடை நவில் மும்மதிலும்(ம்) எரியூட்டிய கண் நுதலான்,
உடை நவிலும் புலித்தோல் உடை ஆடையினான், கடிய
விடை நவிலும் கொடியான், விரும்பும்(ம்) இடம்
                                         வெண்டுறையே.          3
உரை
   
3452. பண் அமர் வீணையினான், பரவிப் பணி தொண்டர்கள் தம்
எண் அமர் சிந்தையினான், இமையோர்க்கும் அறிவு அரியான்,
பெண் அமர் கூறு உடையான், பிரமன் தலையில் பலியான்,
விண்ணவர் தம் பெருமான், விரும்பும்(ம்) இடம்
                                        வெண்டுறையே.           4
உரை
   
3453. பார் இயலும் பலியான்; படி யார்க்கும் அறிவு அரியான்;
சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான்;
போர் இயலும் புரம் மூன்று உடன், பொன் மலையே சிலையா,
வீரியம் நின்று செய்தான்; விரும்பும்(ம்) இடம்
                                    வெண்டுறையே.             5
உரை
   
3454. ஊழிகள் ஆய், உலகு ஆய், ஒருவர்க்கும் உணர்வு அரியான்;
போழ் இள வெண்மதியும் புனலும்(ம்) அணி புன் சடையான்;
யாழின் மொழி உமையாள் வெருவ(வ்), எழில் வெண் மருப்பின்
வேழம் உரித்த பிரான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.  6
உரை
   
3455. கன்றிய காலனையும் உருளக் கனல் வாய் அலறிப்
பொன்ற முனிந்த பிரான், பொடி ஆடிய மேனியினான்,
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான், புலன்கள்
வென்றவன், எம் இறைவன், விரும்பும்(ம்) இடம்
                                        வெண்டுறையே.          7
உரை
   
3456. கரம் இரு-பத்தினாலும் கடுவெஞ்சினம் ஆய் எடுத்த
சிரம் ஒருபத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான்,
பரவ வல்லார் வினைகள் அறுப்பான், ஒருபாகமும் பெண்
விரவிய வேடத்தினான், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. 8
உரை
   
3457. கோல மலர் அயனும், குளிர் கொண்டல் நிறத்தவனும்,
சீலம் அறிவு அரிது ஆய்த் திகழ்ந்து ஓங்கிய செந்தழலான்;
மூலம் அது ஆகி நின்றான்; முதிர் புன்சடை வெண்பிறையான்;
வேலைவிடமிடற்றான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.  9
உரை
   
3458. நக்க உரு ஆயவரும், துவர் ஆடை நயந்து உடை ஆம்
பொக்கர்கள், தம் உரைகள்(ள்) அவை பொய் என, எம்
                                                     இறைவன்,
திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான், கனகம்
மிக்கு உயர் சோதி அவன், விரும்பும்(ம்) இடம்
                                          வெண்டுறையே.          10
உரை
   
3459. திண் அமரும் புரிசைத் திரு வெண்டுறை மேயவனை,
தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர் தம் தலைவன்-
எண் அமர் பல்கலையான், இசை ஞானசம்பந்தன்-சொன்ன
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று
                                                      அறுமே.        11
உரை