62. திருப்பனந்தாள் - பஞ்சமம்
 
3460. கண் பொலி நெற்றியினான், திகழ் கையில் ஓர் வெண்மழுவான்,
பெண் புணர் கூறு உடையான், மிகு பீடு உடை மால்விடையான்,
விண் பொலி மா மதி சேர்தரு செஞ்சடை வேதியன், ஊர்
தண் பொழில் சூழ் பனந்தாள் திருத் தாடகையீச்சுரமே.      1
உரை
   
3461. விரித்தவன், நால்மறையை; மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச
எரித்தவன், முப்புரங்கள்(ள்); இயல் ஏழ் உலகில் உயிரும்
பிரித்தவன்; செஞ்சடைமேல் நிறை பேர் ஒலி வெள்ளம்
                                                         தன்னைத்
தரித்தவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.      2
உரை
   
3462. உடுத்தவன், மான் உரி-தோல்; கழல் உள்க வல்லார் வினைகள்
கெடுத்து அருள்செய்ய வல்லான்; கிளர் கீதம் ஓர்
                                          நால்மறையான்;
மடுத்தவன். நஞ்சு அமுதா; மிக்க மா தவர் வேள்வியை முன்
தடுத்தவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.      3
உரை
   
3463. சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல், மிக ஏத்துமின்-பாய்புனலும்,
போழ் இளவெண்மதியும்(ம்), அனல் பொங்கு அரவும், புனைந்த
தாழ்சடையான் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே!      4
உரை
   
3464. விடம் படு கண்டத்தினான், இருள் வெள்வளை மங்கையொடும்
நடம் புரி கொள்கையினான் அவன், எம் இறை, சேரும் இடம்
படம் புரி நாகமொடு திரை பல்மணியும் கொணரும்
தடம் புனல் சூழ் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.      5
உரை
   
3465. விடை உயர் வெல்கொடியான்; அடி விண்ணொடு மண்ணும்
                                                                 எல்லாம்
புடைபட ஆடவல்லான்; மிகு பூதம் ஆர் பல் படையான்;
தொடை நவில் கொன்றையொடு, வன்னி, துன் எருக்கும்,
                                                            அணிந்த
சடையவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.     6
உரை
   
3466. மலையவன் முன் பயந்த மடமாதை ஓர் கூறு உடையான்;
சிலை மலி வெங்கணையால் புரம் மூன்று அவை செற்று
                                                         உகந்தான்;
அலை மலி தண்புனலும், மதி, ஆடு அரவும்(ம்), அணிந்த
தலையவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.      7
உரை
   
3467. செற்று, அரக்கன் வலியை, திருமெல்விரலால் அடர்த்து
முற்றும் வெண் நீறு அணிந்த திருமேனியன்; மும்மையினான்;
புற்று அரவம், புலியின்(ன்) உரி-தோலொடு, கோவணமும்,
தற்றவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.     8
உரை
   
3468. வில் மலை, நாண் அரவம், மிகு வெங்கனல் அம்பு, அதனால்,
புன்மை செய் தானவர் தம் புரம் பொன்றுவித்தான்; புனிதன்;
நல் மலர்மேல் அயனும், நண்ணு நாரணனும்(ம்), அறியாத்
தன்மையன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.      9
உரை
   
3469. ஆதர் சமணரொடும்(ம்), அடை ஐ(ந்)துகில் போர்த்து உழலும்
நீதர், உரைக்கும் மொழி அவை கொள்ளன்மின்! நின்மலன் ஊர்
போது அவிழ் பொய்கைதனுள்-திகழ் புள் இரிய, பொழில்வாய்த்
தாது அவிழும் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.      10
உரை
   
3470. தண்வயல் சூழ் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரத்துக்
கண் அயலே பிறையான் அவன் தன்னை, முன் காழியர்
                                                                கோன்-
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன்-நல்ல
பண் இயல் பாடல் வல்லார் அவர்தம் வினை பற்று
                                                       அறுமே.     11
உரை