75. திருச்சண்பைநகர் - திருவிராகம் - சாதாரி
 
3603. “எம் தமது சிந்தை பிரியாத பெருமான்!” என இறைஞ்சி,
                                                        இமையோா
வந்து துதிசெய்ய, வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை
                                                        அதனால்,
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற
                                                          அழகன்,
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு, மேவு பதி
                                         சண்பைநகரே.       1
உரை
   
3604. அங்கம் விரி துத்தி அரவு, ஆமை, விரவு ஆரம் அமர்
                                              மார்பில் அழகன்,
பங்கய முகத்து அரிவையோடு பிரியாது, பயில்கின்ற பதிதான்-
பொங்கு பரவைத் திரை கொணர்ந்து பவளத்திரள் பொலிந்த
                                                               அயலே,
சங்கு புரி இப்பி தரளத்திரள் பிறங்கு ஒளி கொள்
                                          சண்பைநகரே.        2
உரை
   
3605. போழும் மதி, தாழும் நதி, பொங்கு அரவு, தங்கு புரி
                                        புன்சடையினன்,
யாழ் இன்மொழி, மாழைவிழி, ஏழை இளமாதினொடு இருந்த
                                                              பதிதான்-
வாழை, வளர் ஞாழல், மகிழ், மன்னு புனை, துன்னு பொழில்
                                                     மாடு, மடல் ஆர்
தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என, உந்து தகு
                                         சண்பைநகரே.     3
உரை
   
3606. கொட்ட முழவு, இட்ட அடி வட்டணைகள் கட்ட, நடம் ஆடி,
                                                             குலவும்
பட்டம் நுதல், கட்டு மலர் மட்டு மலி, பாவையொடு மேவு
                                                          பதிதான்-
வட்டமதி தட்டு பொழிலுள், தமது வாய்மை வழுவாத
                                                   மொழியார்
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில்
                                                 சண்பைநகரே.      4
உரை
   
3607. பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி,
                                                               பகவன்,
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர்
                                 பெருமானது இடம் ஆம்
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில், நீடு விரை ஆர்
                                                          புறவு எலாம்,
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர்
                                                        சண்பைநகரே.  5
உரை
   
3608. பாலன் உயிர்மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த
                                                             பரமன்,
ஆலும் மயில் போல் இயலி ஆயிழைதனோடும், அமர்வு
                                              எய்தும் இடம் ஆம்
ஏலம் மலி சோலை இனவண்டு மலர் கெண்டி, நறவு உண்டு
                                                            இசைசெய,
சாலி வயல் கோலம் மலி சேல் உகள, நீலம் வளர்
                                            சண்பைநகரே.        6
உரை
   
3609. விண் பொய் அதனால் மழை விழாதொழியினும், விளைவுதான்
                                                                    மிக உடை
மண் பொய் அதனால் வளம் இலாதொழியினும், தமது வண்மை
                                                                     வழுவார்
உண்ப கரவார், உலகின் ஊழி பலதோறும் நிலை ஆன
                                                        பதிதான்-
சண்பைநகர்; ஈசன் அடி தாழும் அடியார் தமது தன்மை
                                                          அதுவே.    7
உரை
   
3610. வரைக்குல மகட்கு ஒரு மறுக்கம் வருவித்த, மதி இல், வலி
                                                                    உடை
அரக்கனது உரக் கரசிரத்து உற அடர்த்து, அருள்புரிந்த
                                                           அழகன்
இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ்
                                                           விழவினில்,
தருக்குலம் நெருக்கும் மலி தண்பொழில்கள் கொண்டல் அன
                                                        சண்பைநகரே.  8
உரை
   
3611. நீல வரை போல நிகழ் கேழல் உரு, நீள் பறவை நேர் உருவம்,
                                                                     ஆம்
மாலும் மலரானும், அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன்,
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ்
                                                         புறவு எலாம்
சாலி மலி, சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில்,
                                               சண்பைநகரே.    9
உரை
   
3612. போதியர்கள், பிண்டியர்கள், போது வழுவாத வகை உண்டு,
                                                            பலபொய்
ஓதி, அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை; நன்று அது
                                              உணர்வீர்! உரைமினோ
ஆதி, எமை ஆள் உடைய அரிவையொடு பிரிவு இலி, அமர்ந்த
                                                                    பதிதான்,
சாதிமணி தெண்திரை கொணர்ந்து வயல் புக எறிகொள்
                                                சண்பைநகரே!     10
உரை
   
3613. வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து
                                                            அமரும் ஊர்
சாரின் முரல் தெண்கடல் விசும்பு உற முழங்கு ஒலி கொள்
                                                     சண்பைநகர்மேல்,
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன், உரைசெய்
சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர், சேர்வர், சிவலோக
                                                           நெறியே.   11
உரை