77. திருமாணிகுழி - திருவிராகம் - சாதாரி
 
3624. பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒரு பங்கர், புனல்
                                                       தங்கு சடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்த விறல் வித்தகர், மகிழ்ந்து
                                                         உறைவு இடம்
கன்னி இளவாளை குதிகொள்ள, இள வள்ளை படர் அள்ளல்
                                                               வயல்வாய்
மன்னி இள மேதிகள் படிந்து, மனை சேர் உதவி
                                          மாணிகுழியே.        1
உரை
   
3625. சோதி மிகு நீறு அது மெய் பூசி, ஒரு தோல் உடை புனைந்து,
                                                               தெருவே
மாதர் மனைதோறும் இசை பாடி, வசி பேசும் அரனார் மகிழ்வு
                                                                    இடம்
தாது மலி தாமரை மணம் கமழ, வண்டு முரல் தண் பழனம்
                                                                 மிக்கு
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி
                                         மாணிகுழியே.        2
உரை
   
3626. அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ,
                                                          சினம் உடைக்
கம்ப மதயானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம்
வம்பு மலி சோலை புடை சூழ, மணி மாடம் அது நீடி, அழகு
                                                                    ஆர்
உம்பரவர்கோன் நகரம் என்ன, மிக மன் உதவி
                                     மாணிகுழியே.          3
உரை
   
3627. நித்தம் நியமத் தொழிலன் ஆகி, நெடுமால் குறளன் ஆகி,
                                                               மிகவும்
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம்                                                                     ஆம்
கொத்து அலர் மலர்ப்பொழிலில் நீடு குலமஞ்ஞை நடம்
                                            ஆடல் அது கண்டு
ஒத்த வரிவண்டுகள் உலாவி, இசை பாடு உதவி
                                         மாணிகுழியே.          4
உரை
   
3628. மாசு இல் மதி சூடு சடை மா முடியர், வல் அசுரர்
                                               தொல்-நகரம் முன்
நாசம் அது செய்து, நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன்
                                                           இடம் ஆம்
வாசம் மலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி,
                                                            அழகு ஆர்
ஊசல் மிசை ஏறி, இனிது ஆக, இசை பாடு உதவி
                                               மாணிகுழியே.        5
உரை
   
3629. மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ
                                                          மனம் ஆய்
வந்த ஒரு காலன் உயிர் மாள உதை செய்த மணிகண்டன்
                                                         இடம் ஆம்
சந்தினொடு கார் அகில் சுமந்து, தட மா மலர்கள் கொண்டு,
                                                             கெடிலம்
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி
                                             மாணிகுழியே.      6
உரை
   
3630. எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய, இறையே கருணை
                                                                      ஆய்,
உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு, உலகம் உய்ய அருள்
                                                      உத்தமன் இடம்
பண் பயிலும் வண்டுபல கெண்டி, மது உண்டு, நிறை
                                   பைம்பொழிலின் வாய்,
ஒண் பலவின் இன்கனி சொரிந்து, மணம் நாறு உதவி
                                                     மாணிகுழியே.     7
உரை
   
3631. எண்ணம் அது இன்றி, எழில் ஆர் கைலை மாமலை எடுத்த
                                                            திறல் ஆர்
திண்ணிய அரக்கனை நெரித்து, அருள்புரிந்த சிவலோகன்
                                                          இடம் ஆம்
பண் அமரும் மென்மொழியினார், பணைமுலைப் பவளவாய்
                                                      அழகு அது ஆர்
ஒண் நுதல் மடந்தையர், குடைந்து புனல் ஆடு உதவி
                                                  மாணிகுழியே.      8
உரை
   
3632. நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து,
                                                         முடிமேல்
ஏடு உலவு திங்கள், மதமத்தம், இதழிச் சடை எம் ஈசன் இடம்
                                                                  ஆம்
மாடு உலவு மல்லிகை, குருந்து, கொடிமாதவி, செருந்தி,
                                                          குரவின்
ஊடு உலவு புன்னை, விரி தாது மலி சேர் உதவி
                                          மாணிகுழியே.          9
உரை
   
3633. மொட்டை அமண் ஆதர், முது தேரர், மதி இ(ல்)லிகள்
                                               முயன்றன படும்
முட்டைகள் மொழிந்த மொழி கொண்டு அருள் செய்யாத
                                    முதல்வன் தன் இடம் ஆம்
மட்டை மலி தாழை இளநீர் முதிய வாழையில் விழுந்த
                                                            அதரில்,
ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர, ஏறு உதவி
                                        மாணிகுழியே.          10
உரை
   
3634. உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி
                                        மாணிகுழிமேல்,
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி
                                                         நகரான்-
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது
                                                                   சொல்
முந்தி இசை செய்து மொழிவார்கள் உடையார்கள், நெடு வான
                                                        நிலனே.      11
உரை