84. திருப்புறவம் - திருவிராகம் - சாதாரி
 
3701. பெண் இயல் உருவினர், பெருகிய புனல் விரவிய பிறைக்
கண்ணியர், கடு நடை விடையினர், கழல் தொழும் அடியவர்
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர், நணுகு உயர் பதி
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே.      1
உரை
   
3702. கொக்கு உடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்கு உடை வடமும் ஒர் அரவமும் அலர் அரைமிசையினில்
திக்கு உடை மருவிய உருவினர், திகழ் மலைமகளொடும்
புக்கு உடன் உறைவது புதுமலர் விரை கமழ் புறவமே.     2
உரை
   
3703. கொங்கு இயல் சுரிகுழல், வரிவளை, இளமுலை, உமை ஒரு-
பங்கு இயல் திரு உரு உடையவர்; பரசுவொடு இரலை மெய்
தங்கிய கரதலம் உடையவர்; விடையவர்; உறைபதி
பொங்கிய பொருகடல் கொள, அதன்மிசை உயர் புறவமே.  3
உரை
   
3704. மாதவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை,
மேதகு திருவடி இறை உற, உயிர் அது விலகினார்
சாதக உரு இயல் சுரன் இடை, உமை வெரு உற, வரு
போதக உரி-அதள் மருவினர்; உறை பதி-புறவமே.      4
உரை
   
3705. காமனை அழல் கொள விழிசெய்து, கருதலர் கடிமதில்
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி
ஓமமொடு உயர்மறை, பிற இயவகைதனொடு, ஒளி, கெழு
பூமகள், அலரொடு, புனல்கொடு, வழிபடு புறவமே.      5
உரை
   
3706. சொல்-நயம் உடையவர், சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர், நடு உணர் பெருமையர், திருவடி பேணிட,
முன்னைய முதல்வினை அற அருளினர் உறை முது பதி
புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி
                                       புறவமே.  6
உரை
   
3707. வரி தரு புலி அதள் உடையினர், மழு எறி படையினர்
பிரிதரு நகுதலைவடம் முடிமிசை அணி பெருமையர்,
எரிதரும் உருவினர், இமையவர் தொழுவது ஒர் இயல்பினர்
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே.    7
உரை
   
3708. வசி தரும் உருவொடு மலர்தலை உலகினை வலிசெயும்
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒருபதும் நெரிவு உற
ஒசிதர ஒருவிரல் நிறுவினர், ஒளி வளர் வெளிபொடி
பொசிதரு திரு உரு உடையவர், உறை பதி புறவமே.      8
உரை
   
3709. தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய்தவிசினில்
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வு உடை ஒருவனும்,
வானகம் வரை அகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப்
போனகம் மருவினன், அறிவு அரியவர் பதி புறவமே.      9
உரை
   
3710. கோசரம் நுகர்பவர், கொழுகிய துவர் அன துகிலினர்
பாசுர வினை தரு பளகர்கள், பழி தரு மொழியினர்
நீசரை விடும், இனி! நினைவு உறும் நிமலர்தம் உறைபதி,
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி, புறவமே!      10
உரை
   
3711. போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை,
வேதியர் அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்-
ஓதிய ஒருபதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும்
நீதியர் அவர், இரு நிலன் இடை நிகழ்தரு பிறவியே.      11
உரை