87. திருநள்ளாறு - திருவிராகம் - சாதாரி
 
3734. தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள்
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின்,
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர் தம் நாமமே,
மிளிர் இள வளர் எரி இடில், இவை பழுது இலை;
                                                மெய்ம்மையே!      1
உரை
   
3735. போது அமர்தரு புரிகுழல் எழில் மலைமகள் பூண் அணி
சீதம் அது அணிதரு முகிழ் இளவனமுலை செறிதலின்,
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர் தம் நாமமே,
மீ தமது எரியினில் இடில், இவை பழுது இலை;
                                                      மெய்ம்மையே!                                                                         2
உரை
   
3736. இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம்
கட்டு உறு கதிர் இளவனமுலை இணையொடு கலவலின்,
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர் தம் நாமமே;
இட்டு உறும் எரியினில் இடில், இவை பழுது இலை;
                                             `மெய்ம்மையே!      3
உரை
   
3737. மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு
கச்சு அணி கதிர் இளவனமுலை அவையொடு கலவலின்,
நச்சு அணி மிடறு உடை அடிகள் நள்ளாறர் தம் நாமமே,
மெச்சு அணி எரியினில் இடில், இவை பழுது இலை;
                                               மெய்ம்மையே!      4
உரை
   
3738. பண் இயல் மலைமகள் கதிர் விடு பரு மணி அணி நிறக்
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின்,
நண்ணிய குளிர்புனல் புகுதும் நள்ளாறர் தம் நாமமே,
விண் இயல் எரியினில் இடில், இவை பழுது இலை;
                                              மெய்ம்மையே!      5
உரை
   
3739. போது உறு புரிகுழல் மலைமகள் இள வளர் பொன் அணி
சூது உறு தளிர் நிற வனமுலை அவையொடு துதைதலின்,
தாது உறு நிறம் உடை அடிகள் நள்ளாறர் தம் நாமமே,
மீது உறும் எரியினில் இடில், இவை பழுது இலை;
                                     மெய்ம்மையே!      6
உரை
   
3740. கார் மலி நெறிபுரி சுரிகுழல் மலைமகள் கவின் உறு
சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின்,
தார் மலி நகுதலை உடைய நள்ளாறர் தம் நாமமே,
ஏர் மலி எரியினில் இடில், இவை பழுது இலை;
                                           மெய்ம்மையே!      7
உரை
   
3741. மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு
பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை
                                                  புணர்தலின்,
தன் இயல் தசமுகன் நெறிய, நள்ளாறர் தம் நாமமே,
மின் இயல் எரியினில் இடில், இவை பழுது இலை;
                                              மெய்ம்மையே!      8
உரை
   
3742. கான் முக மயில் இயல் மலைமகள் கதிர் விடு கனம் மிகு
பால் முகம் அயல் பணை இணை முலை துணையொடு
                                                          பயிறலின்,
நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர் தம் நாமமே,
மேல் முக எரியினில் இடில், இவை பழுது இலை;
                                              மெய்ம்மையே!      9
உரை
   
3743. அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசயச்
சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின்,
புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர் தம் நாமமே,
மெய்த் திரள் எரியினில் இடில், இவை பழுது இலை;
                                               மெய்ம்மையே!      10
உரை
   
3744. சிற்றிடை அரிவை தன் வனமுலை இணையொடு செறிதரும்
நல்-திறம் உறு, கழுமல நகர் ஞானசம்பந்தன
கொற்றவன் எதிர் இடை எரியினில் இட, இவை கூறிய
சொல்-தெரி ஒருபதும் அறிபவர் துயர் இலர்; தூயரே.      11
உரை