93. திருஅம்பர்மாகாளம் - சாதாரி
 
3799. படியுள் ஆர் விடையினர், பாய் புலித்தோலினர், பாவநாசர்
பொடி கொள் மா மேனியர், பூதம் ஆர் படையினர்,
                                                           பூணநூலர்,
கடி கொள் மா மலர் இடும் அடியினர், பிடி நடை
                                                        மங்கையோடும்
அடிகளார் அருள் புரிந்து இருப்பு இடம் அம்பர்மாகாளம்
                                                       தானே.      1
உரை
   
3800. கையில் மான் மழுவினர், கடுவிடம் உண்ட எம் காளகண்டர்
செய்ய மா மேனியர், ஊன் அமர் உடைதலைப் பலி திரிவார்
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ, நடம்
                                                           அது ஆடும்
ஐயன், மா தேவியோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம்
                                                        தானே.      2
உரை
   
3801. பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர், பரிவு இலார் பால்
கரவினர், கனல் அன உருவினர், படுதலைப் பலிகொடு ஏகும்
இரவினர், பகல் எரிகான் இடை ஆடிய வேடர், பூணும்
அரவினர், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம்
                                                          தானே.      3
உரை
   
3802. நீற்றினர், நீண்ட வார்சடையினர், படையினர், நிமலர், வெள்
ஏற்றினர், எரி புரி கரத்தினர், புரத்து உளார் உயிரை வவ்வும்
கூற்றினர், கொடியிடை முனிவு உற நனி வரும் குலவு
                                                               கங்கை-
ஆற்றினர், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம்
                                                         தானே.      4
உரை
   
3803. புறத்தினர், அகத்து உளர், போற்றி நின்று அழுது எழும்
                                          அன்பர் சிந்தைத்
திறத்தினர், அறிவு இலாச் செதுமதித் தக்கன் தன் வேள்வி
                                                               செற்ற
மறத்தினர், மாதவர் நால்வருக்கு ஆலின் கீழ் அருள் புரிந்த
அறத்தினர், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம்
                                                         தானே.      5
உரை
   
3804. பழக மா மலர் பறித்து, இண்டை கொண்டு, இறைஞ்சுவார்
                                                           பால் செறிந்த
குழகனார், குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட
                                                               நின்ற
கழகனார், கரி உரித்து ஆடு கங்காளர், நம் காளி ஏத்தும்
அழகனார், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம்
                                                        தானே.      6
உரை
   
3805. சங்க வார் குழையினர், தழல் அன உருவினர், தமது அருகே
எங்கும் ஆய் இருந்தவர், அருந்தவ முனிவருக்கு அளித்து
                                                             உகந்தார்
பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம்
                                                               பேணி
அங்கம் ஆறு ஓதுவார், இருப்பு இடம் அம்பர்மாகாளம்
                                                        தானே.      7
உரை
   
3806. பொரு சிலை மதனனைப் பொடிபட விழித்தவர், பொழில்
                                                            இலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழ் உற அடர்த்தவர், கோயில் கூறில்
பெரு சிலை, நல மணி, பீலியோடு, ஏலமும், பெருக நுந்தும்
அரசிலின் வடகரை அழகு அமர் அம்பர்மாகாளம் தானே.
                                                                    8
உரை
   
3807. வரி அரா அதனிசைத் துயின்றவன் தானும், மா மலர்
                                                          உளானும்,
எரியரா, அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து,
                                                           பின்னும்
பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய், பணிவு இலாதவருக்கு
                                                           என்றும்
அரியராய், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம்
                                                          தானே.      9
உரை
   
3808. சாக்கியக்கயவர், வன் தலை பறிக்கையரும், பொய்யினால்
                                                                 நூல்
ஆக்கிய மொழி அவை பிழையவை; ஆதலில், வழிபடுவீர்
வீக்கிய அரவு உடைக் கச்சையான், இச்சை ஆனவர்கட்கு
                                                               எல்லாம்
ஆக்கிய அரன், உறை அம்பர்மாகாளமே அடைமின், நீரே!
                                                                   10
உரை
   
3809. செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வருபுனல்
                                                     அரிசில் சூழ்ந்த
அம்பர் மாகாளமே கோயிலா அணங்கினோடு இருந்த
                                                           கோனை,
கம்பின் ஆர் நெடுமதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன
நம்பி, நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம், வினை; நலம்
                                               பெறுவர், தாமே.      11
உரை