99. திருமுதுகுன்றம் - திருமுக்கால் - சாதாரி
 
3864. முரசு அதிர்ந்து எழுதரு முது குன்றம் மேவிய
பரசு அமர் படை உடையீரே;
பரசு அமர் படை உடையீர்! உமைப் பரவுவார்
அரசர்கள் உலகில் ஆவாரே.      1
உரை
   
3865. மொய் குழலாளொடு முதுகுன்றம் மேவிய
பை அரவம் அசைத்தீரே;
பை அரவம் அசைத்தீர்! உமைப் பாடுவார்
நைவு இலர்; நாள்தொறும் நலமே.      2
உரை
   
3866. முழவு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
மழ விடை அது உடையீரே;
மழ விடை அது உடையீர்! உமை வாழ்த்துவார்
பழியொடு பகை இலர்தாமே.      3
உரை
   
3867. முருகு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
உரு அமர் சடைமுடியீரே;
உரு அமர் சடைமுடியீர்! உமை ஓதுவார்
திருவொடு தேசினர் தாமே.      4
உரை
   
3868. முத்தி தரும் உயர் முதுகுன்றம் மேவிய
பத்து முடி அடர்த்தீரே;
பத்து முடி அடர்த்தீர்! உமைப் பாடுவார்
சித்தம் நல்ல(வ்) அடியாரே.      8
உரை
   
3869. முயன்றவர் அருள் பெறு முதுகுன்றம் மேவி, அன்று
இயன்றவர் அறிவு அரியீரே;
இயன்றவர் அறிவு அரியீர்! உமை ஏத்துவார்
பயன் தலை நிற்பவர் தாமே.      9
உரை
   
3870. மொட்டு அலர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
கட்டு அமண் தேரைக் காய்ந்தீரே;
கட்டு அமண் தேரைக் காய்ந்தீர்! உமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர் பெறுவாரே.      10
உரை
   
3871. மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை
நாடிய ஞானசம்பந்தன்
நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ்
பாடிய அவர் பழி இலரே.      11
உரை