101. திருஇராமேச்சுரம் - பழம்பஞ்சுரம்
 
3879. திரிதரு மா மணி நாகம் ஆடத் திளைத்து, ஒரு தீ-அழல்வாய்,
நரி கதிக்க, எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார்
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய,
விரி கதிர் வெண்பிறை மல்கு சென்னி, விமலர்; செயும்
                                                     செயலே!      1
உரை
   
3880. பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து, அயலே புரிவோடு
                                                        உமை பாட,
தெறி கிளரப் பெயர்ந்து, எல்லி ஆடும் திறமே தெரிந்து
                                                        உணர்வார்
எறி கிளர் வெண்திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய,
மறி கிளர் மான் மழுப் புல்கு கை, எம் மணாளர்; செயும்
                                                  செயலே!      2
உரை
   
3881. அலை வளர் தண் புனல் வார் சடைமேல் அடக்கி, ஒரு பாகம்
மலை வளர் காதலி பாட, ஆடி மயக்கா வரு மாட்சி
இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார்
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர், செயும்
                                                    செயலே!      3
உரை
   
3882. மா தன நேர் இழை ஏர் தடங்கண் மலையான் மகள் பாட,
தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து
                                                      உணர்வார்
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம்
                                                          மேயார்
போது வெண்திங்கள் பைங்கொன்றை சூடும் புனிதர் செயும்
                                                   செயலே!      4
உரை
   
3883. சூலமோடு ஒண்மழு நின்று இலங்க, சுடுகாடு இடம் ஆக,
கோல நல் மாது உடன்பாட, ஆடும் குணமே குறித்து
                                                       உணர்வார்
ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய,
நீலம் ஆர் கண்டம் உடைய, எங்கள் நிமலர்; செயும்
                                                    செயலே!      5
உரை
   
3884. கணை பிணை வெஞ்சிலை கையில் ஏந்தி; காமனைக்
                                                 காய்ந்தவர் தாம்
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர்
                                                     ஆகி, நல்ல
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம்
                                                             மேயார்
அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும்
                                                  செயலே!      6
உரை
   
3885. நீரின் ஆர் புன்சடை பின்பு தாழ, நெடு வெண்மதி சூடி,
ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து
                                                       உணர்வார்
ஏரின் ஆர் பைம்பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம்
                                                              மேய,
காரின் ஆர் கொன்றை வெண்திங்கள் சூடும், கடவுள்;
                                        செயும் செயலே!      7
உரை
   
3886. பொன் திகழ் சுண்ண வெண்நீறு பூசி, புலித்தோல் உடை
                                                                ஆக,
மின் திகழ் சோதியர், பாடல் ஆடல் மிக்கார், வரு மாட்சி
என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார்
குன்றினால் அன்று அரக்கன் தடந்தோள் அடர்த்தார்,
                                            கொளும் கொள்கையே!      8
உரை
   
3887. கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன், அழகு ஆய
மேவலன், ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர் இறை,
                                                             மெய்ம்மை
ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர், செயும்
                                                         செயலே!      9
உரை
   
3888. பின்னொடு முன் இடு தட்டைச் சாத்திப் பிரட்டே திரிவாரும்,
பொன் நெடுஞ் சீவரப் போர்வையார்கள், புறம் கூறல்
                                                             கேளாதே,
இன் நெடுஞ் சோலை வண்டு யாழ்முரலும் இராமேச்சுரம்
                                                                 மேய,
பல்-நெடு வெண்தலை கொண்டு உழலும், பரமர் செயும்
                                                        செயலே!      10
உரை
   
3889. தேவியை வவ்விய தென் இலங்கை அரையன் திறல் வாட்டி
ஏ இயல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை,
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும்
பா இயல் மாலை வல்லார் அவர் தம் வினை ஆயின பற்று
                                                         அறுமே.      11
உரை