103. திருவலம்புரம் - பழம்பஞ்சுரம்
 
3901. கொடி உடை மும்மதில் ஊடு உருவக் குனி வெஞ்சிலை தாங்கி
இடிபட எய்த அமரர்பிரான், அடியார் இசைந்து ஏத்தத்
துடி இடையாளை ஒர்பாகம் ஆகத் துதைந்தார், இடம்போலும்
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன்நகரே.      1
உரை
   
3902. கோத்த கல்லாடையும், கோவணமும், கொடுகொட்டி
                                           கொண்டு ஒரு கை,
தேய்த்து அன்று அநங்கனைத் தேசு அழித்து, திசையார்
                                                   தொழுது ஏத்த,
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம்
                                                           போலும்
வாய்த்த முத்தீத் தொழில் நால் மறையோர் வலம்புர
                                                    நன்நகரே.      2
உரை
   
3903. நொய்யது ஒர் மான்மறி கைவிரலின் நுனை மேல் நிலை ஆக்கி,
மெய் எரிமேனி வெண் நீறு பூசி, விரிபுன் சடை தாழ,
மை இருஞ் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும்
வைகலும் மா முழவம்(ம்) அதிரும் வலம்புர நன்நகரே.      3
உரை
   
3904. ஊன் அமர் ஆக்கை உடம்பு தன்னை உணரின் பொருள்
                                                              அன்று;
தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை
                                                         ஏத்துமினோ!
ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள்
                                                         இடம்போலும்
வானவர் நாள்தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன்நகரே.
                                                                            4
உரை
   
3905. செற்று எறியும் திரை ஆர் கலுழிச் செழுநீர் கிளர்
                                                   செஞ்சடை மேல்
அற்று அறியாது, அனல் ஆடு நட்டம், அணி ஆர்
                                                       தடங்கண்ணி
பெற்று அறிவார், எருது ஏற வல்ல பெருமான், இடம்போலும்
வற்று அறியாப் புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன்நகரே.
                                                                          5
உரை
   
3906. உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு, உமையோடு
                                                         உடன் ஆகி,
சுண்ண வண்ணப்பொடி மேனி பூசிச் சுடர்ச் சோதி நின்று
                                                                இலங்க,
பண்ண வண்ணத்தன பாணி செய்ய, பயின்றார் இடம்போலும்
வண்ண வண்ணப் பறை பாணி அறா வலம்புர நன்நகரே.
                                                                        6
உரை
   
3907. புரிதரு புன்சடை பொன்தயங்க, புரிநூல் புரண்டு இலங்க,
விரைதரு வேழத்தின் ஈர் உரி-தோல் மேல் மூடி, வேய்
                                                         புரை தோள்
அரை தரு பூந்துகில் ஆர் அணங்கை அமர்ந்தார்
                                                        இடம்போலும்
வரை தரு தொல்புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன்நகரே.
                                                                    7
உரை
   
3908. தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலைபத்து
                                                   உடையானை,
ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க, ஒரு கால்விரல்
                                                              ஊன்றி,
மிண்டு அது தீர்த்து அருள் செய்ய வல்ல விகிர்தர்க்கு
                                                    இடம்போலும்
வண்டு இணை தன்னொடு வைகு பொழில் வலம்புர
                                                   நன்நகரே.      8
உரை
   
3909. தார் உறு தாமரைமேல் அயனும், தரணி அளந்தானும்,
தேர்வு அறியா வகையால் இகலித் திகைத்துத் திரிந்து ஏத்த,
பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம்போலும்
வார் உறு சோலை மணம் கமழும் வலம்புர நன்நகரே.      9
உரை
   
3910. காவிய நல்-துவர் ஆடையினார், கடு நோன்பு மேற்கொள்ளும்
பாவிகள், சொல்லைப் பயின்று அறியாப் பழந் தொண்டர்
                                                             உள் உருக,
ஆவியுள் நின்று அருள் செய்ய வல்ல அழகர் இடம்போலும்
வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன்நகரே.
                                                                    10
உரை
   
3911. நல் இயல் நால்மறையோர் புகலித் தமிழ் ஞானசம்பந்தன்,
வல்லியந் தோல் உடை ஆடையினான் வலம்புர நன்நகரைச்
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர், தொல்வினை
                                                                      போய்,
செல்வன சேவடி சென்று அணுகி, சிவலோகம் சேர்வாரே.
                                                                         11
உரை