110. திருப்பிரமபுரம் - ஈரடி - பழம்பஞ்சுரம்
 
3978. வரம் அதே கொளா, உரம் அதே செயும் புரம்
                                எரித்தவன்-பிரமநல்புரத்து
அரன்-நன்நாமமே பரவுவார்கள் சீர் விரவும், நீள் புவியே.  
    1
உரை
   
3979. சேண் உலாம் மதில் வேணு மண் உளோர் காண மன்றில்
                                               ஆர் வேணுநல்புரத்
தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே.      2
உரை
   
3980. அகலம் ஆர் தரைப் புகலும் நால்மறைக்கு இகல் இலோர்கள்
                                                  வாழ் புகலி மா நகர்,
பகல் செய்வோன் எதிர்ச் சகல சேகரன் அகில நாயகனே.
                                                                        3
உரை
   
3981. துங்க மாகரி பங்கமா அடும் செங் கையான் நிகழ்
                                           வெங்குருத் திகழ்
அங்கணான் அடி தம் கையால்-தொழ, தங்குமோ, வினையே?
                                                                           4
உரை
   
3982. “காணி, ஒண் பொருள், கற்றவர்க்கு ஈகை உடைமையோர்
                                    அவர் காதல் செய்யும் நல்-
தோணிவண் புரத்து ஆணி” என்பவர் தூ மதியினரே.        5
உரை
   
3983. ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடைப் பூந் தண் ஓதியாள்
                                              சேர்ந்த பங்கினன்
பூந்தராய் தொழும் மாந்தர் மேனிமேல் சேர்ந்து இரா,
                                            வினையே.         6
உரை
   
3984. “சுரபுரத்தினைத் துயர் செய் தாருகன் துஞ்ச, வெஞ்சினக்
                                                 காளியைத் தரும்
சிரபுரத்து உளான்” என்ன வல்லவர் சித்தி பெற்றவரே.    7
உரை
   
3985. “உறவும் ஆகி, அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து, நீள்
                                                 புவி இலங்கு சீர்ப்
புறவ மா நகர்க்கு இறைவனே!” என, தெறகிலா, வினையே.
                                              8
உரை
   
3986. பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும்
                                              கெட நெரித்தவன்,
சண்பை ஆதியைத் தொழுமவர்களைச் சாதியா, வினையே.
                                              9
உரை
   
3987. ஆழி அங்கையில் கொண்ட மால், அயன், அறிவு ஒணாதது
                                               ஓர் வடிவு கொண்டவன்-
காழி மா நகர்க் கடவுள் நாமமே கற்றல் நல்-தவமே.     10
உரை
   
3988. விச்சை ஒன்று இலாச் சமணர் சாக்கியப் பிச்சர் தங்களைக்
                                                      கரிசு அறுத்தவன்
கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள்
                                                    கூறுமினே!      11
உரை
   
3989. கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன்
                                                         இன்தமிழ்
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும், முக்கண் எம்
                                               இறையே.      12
உரை