111. திருவீழிமிழலை - ஈரடி - பழம்பஞ்சுரம்
 
3990. வேலின் நேர்தரு கண்ணினாள் உமை பங்கன்-அங்கணன்,
                                                       மிழலை மா நகர்
ஆல நீழலில் மேவினான்-அடிக்கு அன்பர் துன்பு இலரே.
                                                                     1
உரை
   
3991. விளங்கும் நால்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர்
                                             மிழலையான் அடி
உளம் கொள்வார் தமை உளம்கொள் வார் வினை ஒல்லை
                                                      ஆசு அறுமே.      2
உரை
   
3992. விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன்,
                                                        மிழலை மா நகர்
இசையும் ஈசனை நசையின் மேவினால், மிசை செயா,
                                                       வினையே.      3
உரை
   
3993. வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி
                                                            நாள்தொறும்,
நின்ற ஆதிதன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே.
                                                                      4
உரை
   
3994. போதகம் தனை உரி செய்தோன், புயல் நேர் வரும் பொழில்
                                                   மிழலை மா நகர்
ஆதரம் செய்த அடிகள், பாதம் அலால் ஒர் பற்று இலமே.
                                                                       5
உரை
   
3995. தக்கன் வேள்வியைச் சாடினார், மணி தொக்க மாளிகை
                                                      மிழலை மேவிய
நக்கனார், அடி தொழுவர் மேல் வினை நாள்தொறும்
                                                 கெடுமே.      6
உரை
   
3996. போர் அணாவு முப்புரம் எரித்தவன், பொழில்கள் சூழ்தரு
                                               மிழலை மா நகர்ச்
சேரும் ஈசனைச் சிந்தை செய்பவர் தீவினை கெடுமே.      7
உரை
   
3997. இரக்கம் இல்-தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான்,
                                        மிகு மிழலையான், அடி
சிரக் கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும், நீள்
                                                       புவியே.      8
உரை
   
3998. துன்று பூமகன், பன்றி ஆனவன், ஒன்றும் ஓர்கிலா
                                                       மிழலையான் அடி
சென்று பூம்புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே.      9
உரை
   
3999. புத்தர், கைச் சமண்பித்தர், பொய்க் குவை வைத்த வித்தகன்
                                                       மிழலை மா நகர்
சித்தம் வைத்தவர் இத் தலத்தினுள் மெய்த் தவத்தவரே.
                                                                          10
உரை
   
4000. சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனைச் சண்பை
                                        ஞானசம்பந்தன் வாய் நவில்
பந்தம் ஆர் தமிழ்பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே.      11
உரை