112. திருப்பல்லவனீச்சுரம் - ஈரடி - பழம்பஞ்சுரம்
 
4001. பரசு பாணியர், பாடல் வீணையர், பட்டினத்து உறை
                                                  பல்லவனீச்சுரத்து
அரசு பேணி நின்றார், இவர் தன்மை அறிவார் ஆர்?      1
உரை
   
4002. பட்டம் நெற்றியர், நட்டம் ஆடுவர், பட்டினத்து உறை
                                         பல்லவனீச்சுரத்து
இட்டம் ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
                                                                 2
உரை
   
4003. பவளமேனியர், திகழும் நீற்றினர், பட்டினத்து உறை
                                                   பல்லவனீச்சுரத்து
அழகராய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?      3
உரை
   
4004. பண்ணில் யாழினர், பயிலும் மொந்தையர், பட்டினத்து உறை
                                                    பல்லவனீச்சுரத்து
அண்ணலாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
                                                                      4
உரை
   
4005. பல் இல் ஓட்டினர், பலி கொண்டு உண்பவர், பட்டினத்து
                                               பல்லவனீச்சுரத்து
எல்லி ஆட்டு உகந்தார், இவர் தன்மை அறிவார் ஆர்?
                                                                   5
உரை
   
4006. பச்சை மேனியர், பிச்சை கொள்பவர், பட்டினத்து உறை
                                             பல்லவனீச்சுரத்து
இச்சை ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?      6
உரை
   
4007. பைங்கண் ஏற்றினர், திங்கள் சூடுவர், பட்டினத்து உறை
                                              பல்லவனீச்சுரத்து
எங்கும் ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
                                                                7
உரை
   
4008. பாதம் கைதொழ வேதம் ஓதுவர், பட்டினத்து உறை
                                             பல்லவனீச்சுரத்து
ஆதியாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?      8
உரை
   
4009. படி கொள் மேனியர், கடி கொள் கொன்றையர், பட்டினத்து
                                          உறை பல்லவனீச்சுரத்து
அடிகளாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?      9
உரை
   
4010. பறை கொள் பாணியர், பிறை கொள் சென்னியர், பட்டினத்து
                                            உறை பல்லவனீச்சுரத்து
இறைவராய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?        10
உரை
   
4011. வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர்
                                          பல்லவனீச்சுரத்தானை
ஞானசம்பந்தன் நல்-தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே.
                                          11
உரை