114. திருஏகம்பம் - திருஇயமகம் - பழம்பஞ்சுரம்
 
4024. பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே; பாவை தன் உருமேல்
                                                       ஒரு பாகனே;
தூய வானவர் வேதத் துவனியே; சோதி மால் எரி வேதத்து
                                                          வ(ன்)னியே;
ஆயும் நன்பொருள் நுண்பொருள் ஆதியே; ஆலநீழல்
                                     அரும்பொருள் ஆதியே;
காய, வில் மதன் பட்டது கம்பமே; கண் நுதல் பரமற்கு
                                            இடம் கம்பமே.      1
உரை
   
4025. சடை அணிந்ததும் வெண்டு அலைமாலையே; தம் உடம்பிலும்
                                              வெண்தலைமாலையே;
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே; பரந்து
                           இலங்கு ஐயில் சூலம் அது என்பதே;
புடை பரப்பன, பூதகணங்களே; போற்று இசைப்பன,
                                                      பூதகணங்களே
கடைகள்தோறும் இரப்பதும் மிச்சையே; கம்பம் மேவி
                                    இருப்பதும் இச்சையே.      2
உரை
   
4026. வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே; ஏறு முன் செலத்
                                                 தும்பை மிலைச்சியே!
அள்ளி நீறு அது பூசுவ தாகமே; ஆன மாசுணம் மூசுவது
                                                            ஆகமே;
புள்ளி ஆடை உடுப்பது கத்துமே; போன, ஊழி, உடுப்பது
                                                          உகத்துமே;
கள் உலாம் மலர்க் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர்க்
                                      கம்பம் இருப்பு அதே.      3
உரை
   
4027. முற்றல் ஆமை அணிந்த முதல்வரே; மூரி ஆமை அணிந்த
                                                            முதல்வரே;
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே; பாலும் நெய் உகந்து
                                                   ஆட்டும் பரிசரே;
வற்றல் ஓடு கலம், பலி தேர்வதே; வானினோடு கலம், பலி,
                                                            தேர்வதே,
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே; காஞ்சி மா நகர்க் கம்பம்
                                                      இருப்பதே.      4
உரை
   
4028. வேடன் ஆகி விசையற்கு அருளியே; வேலை நஞ்சம்
                                               மிசையல் கருளியே;
ஆடுபாம்பு அரை ஆர்த்தது உடை அதே; அஞ்சு பூதமும்
                                                  ஆர்த்தது உடையதே;
கோடு வான்மதிக்கண்ணி அழகிதே; குற்றம் இல் மதிக்
                                                        கண்ணி அழகிதே;
காடு வாழ் பதி ஆவதும் உ(ம்)மது; ஏகம்பம் மா பதி
                                               ஆவதும் உ(ம்)மதே.      5
உரை
   
4029. இரும் புகைக்கொடி தங்கு அழல் கையதே; இமயமாமகள்,
                                              தம் கழல், கையதே;
அரும்பு மொய்த்த மலர்ப் பொறை தாங்கியே; ஆழியான்
                                  தன் மலர்ப் பொறை தாங்கியே;
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே, பேதைமார் மனம்
                                               வாடுதல் செய்துமே,
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே, காஞ்சி மா
                            நகர்க் கம்பம் இருப்பு அதே.      6
உரை
   
4030. முதிரம் மங்கை தவம் செய்த காலமே, முன்பும், அம்
                                   கைதவம் செய்த காலமே,
வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே, வேழம் ஓடகில்
                                          சந்தம் உருட்டியே,
அதிர ஆறு வரத்து அழுவத்தொடே, ஆன் ஐ ஆடுவரத்
                                             தழுவத்தொடே,
கதிர் கொள் பூண் முலைக் கம்பம் இருப்பதே; காஞ்சி மா
                                நகர்க் கம்பம் இருப்பதே.      7
உரை
   
4031. பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல்
                                          நெடுத்த (அ)பலத்தையே
கொண்டு, அரக்கியதும் கால்விரலையே; கோள் அரக்கியதும்
                                                 கால்வு இரலையே;
 உண்டு உழன்றதும் முண்டத் தலையிலே; உடுபதிக்கு இடம்
                                           உண்டு, அத் தலையிலே;
கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே; கடவுள் நீ இடம்
                                       கொண்டது கம்பமே.      8
உரை
   
4032. தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தம் ஆன சுடர்விடு
                                                         சோதியே;
பேணி ஓடு பிரமப் பறவையே பித்தன் ஆன பிரமப்
                                                            பறவையே,
சேணினோடு, கீழ், ஊழி திரிந்துமே, சித்தமோடு கீழ், ஊழி
                                                          திரிந்துமே,
காண நின்றனர் உற்றது கம்பமே; கடவுள் நீ இடம் உற்றது
                                                        கம்பமே.      9
உரை
   
4033. ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே, உன் பொருள்-திறம் ஈர்
                                                           உரு ஆகவே,
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே; ஆற்ற எய்தற்கு அரிது,
                                                          பெரிதுமே;
தேரரும் அறியாது திகைப்பரே; சித்தமும் மறியா, துதி
                                                             கைப்பரே;
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே; கடவுள் நீ இடம்
                                    கொண்டது கம்பமே.      10
உரை
   
4034. கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர்
                                          தீர்த்திடு உகு அம்பமே;
புந்தி செய்வது விரும்பிப் புகலியே பூசுரன் தன் விரும்பிப்
                                                            புகலியே
அந்தம் இல் பொருள் ஆயின கொண்டுமே, அண்ணலின்
                                    பொருள் ஆயின கொண்டுமே,
பந்தன் இன் இயல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின,
                                                       பத்துமே.      11
உரை