118. திருக்கழுமலம் - புறநீர்மை
 
4068. மடல் மலி கொன்றை, துன்று வாள் எருக்கும், வன்னியும்,
                                              மத்தமும், சடைமேல்
படல் ஒலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார்தம்
                                                      இடம் பகரில்,
விடல் ஒலி பரந்த வெண்திரை முத்தம் இப்பிகள்
                                கொணர்ந்து, வெள் அருவிக்
கடல் ஒலி ஓதம் மோத, வந்து அலைக்கும் கழுமலநகர்
                                                  எனல் ஆமே.      1
உரை
   
4069. மின்னிய அரவும், வெறிமலர்பலவும், விரும்பிய திங்களும்,
                                                                  தங்கு
சென்னி அது உடையான், தேவர்தம் பெருமான்,
                        சேயிழையொடும் உறைவு இடம் ஆம்
பொன் இயல் மணியும், முரி கரிமருப்பும், சந்தமும், உந்து
                                                   வன் திரைகள்
கன்னியர் ஆட, கடல் ஒலி மலியும் கழுமலநகர் எனல்
                                                            ஆமே.      2
உரை
   
4070. சீர் உறு தொண்டர், கொண்டு அடி போற்ற, செழு மலர்
                                          புனலொடு தூபம்;
தார் உறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு
                                            இடம் எங்கும்
ஊர் உறு பதிகள் உலகு உடன் பொங்கி ஒலிபுனல்
                                      கொள, உடன்மிதந்த,
கார் உறு செம்மை நன்மையால் மிக்க கழுமலநகர் எனல்
                                                            ஆமே.      3
உரை
   
4071. மண்ணினார் ஏத்த, வான் உளார் பரச, அந்தரத்து அமரர்கள்
                                                              போற்ற,
பண்ணினார் எல்லாம்; பலபல வேடம் உடையவர்; பயில்வு
                                                   இடம் எங்கும்
எண்ணினால் மிக்கார், இயல்பினால் நிறைந்தார்,
                                          ஏந்திழையவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பம் கண்டு, ஒளி பரக்கும் கழுமலநகர்
                                                   எனல் ஆமே.      4
உரை
   
4072. சுருதியான் தலையும், நாமகள் மூக்கும், சுடரவன் கரமும்,
                                               முன் இயங்கு
பருதியான் பல்லும், இறுத்து அவர்க்கு அருளும் பரமனார்
                                        பயின்று இனிது இருக்கை
விருதின் நால்மறையும், அங்கம் ஓர் ஆறும், வேள்வியும்
                                         வேட்டவர், ஞானம்
கருதினார், உலகில் கருத்து உடையார், சேர் கழுமலநகர்
                                                 எனல் ஆமே.      5
உரை
   
4073. புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார்,
                                               பனிமலர்க்கொன்றை
பற்றி வான்மதியம் சடை இடை வைத்த படிறனார், பயின்று
                                                  இனிது இருக்கை
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடிச் செயிர்த்து,
                                      வண் சங்கொடு வங்கம்
கல்-துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும்
                               கழுமலநகர் எனல் ஆமே.      6
உரை
   
4074. அலை புனல் கங்கை தங்கிய சடையார், அடல் நெடுமதில்
                                                          ஒருமூன்றும்
கொலை இடைச் செந்தீ வெந்து அறக் கண்ட குழகனார்,
                                            கோயிலது என்பர்
மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடை
                                                 இடை எங்கும்
கலை களித்து ஏறிக் கானலில் வாழும் கழுமலநகர் எனல்
                                                         ஆமே.      7
உரை
   
4075. ஒருக்க முன் நினையாத் தக்கன்தன் வேள்வி உடைதர
                                        உழறிய படையர்
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார்,
                                     அமர்ந்து உறை கோயில்
பரக்கும் வண்புகழார் பழி அவை பார்த்துப் பலபல
                                   அறங்களே பயிற்றி,
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமலநகர்
                                                எனல் ஆமே.      8
உரை
   
4076. அரு வரை பொறுத்த ஆற்றலினானும், அணி கிளர்
                                              தாமரையானும்,
இருவரும் ஏத்த, எரிஉரு ஆன இறைவனார் உறைவு இடம்
                                                     வினவில்,
ஒருவர் இவ் உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல்
                                       வெள்ளம் முன் பரப்ப,
கருவரை சூழ்ந்த கடல் இடை மிதக்கும் கழுமலநகர் எனல்
                                                        ஆமே.      9
உரை
   
4077. உரிந்து உயர் உருவில் உடை தவிர்ந்தாரும், அத் துகில்
                                              போர்த்து உழல்வாரும்,
தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளாச் செம்மையார்
                                        நன்மையால் உறைவு ஆம்
குருந்து, உயர் கோங்கு, கொடிவிடு முல்லை, மல்லிகை,
                                                சண்பகம், வேங்கை,
கருந்தடங்கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமலநகர்
                                               எனல் ஆமே.      10
உரை
   
4078. கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர்
                                                      உறைவார்மேல்
ஞானசம்பந்தன் நல்-தமிழ்மாலை நன்மையால் உரை செய்து
                                                          நவில்வார்
ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி, உள்ளமும் ஒருவழிக்
                                                          கொண்டு
வான் இடை வாழ்வர்; மண்மிசைப் பிறவார்; மற்று இதற்கு
                                         ஆணையும் நமதே.      11
உரை