122. திருஓமாம்புலியூர் - புறநீர்மை
 
4111. பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி
                                                     அடிகள்
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர், விருப்பொடும்
                                    உறைவு இடம் வினவில்
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதிச் செறிதரு வண்டு
                                                        இசை பாடும்
ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர், வடதளி
                                                      அதுவே.      1
உரை
   
4112. சம்பரற்கு அருளி, சலந்தரன் வீயத் தழல் உமிழ் சக்கரம்
                                                          படைத்த
எம்பெருமானார், இமையவர் ஏத்த, இனிதின் அங்கு உறைவு
                                                        இடம் வினவில்
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை
                                                          பொழியும்,
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர், வடதளி
                                                     அதுவே.      2
உரை
   
4113. பாங்கு உடைத் தவத்துப் பகீரதற்கு அருளிப் படர்சடைக்
                                                  கரந்த நீர்க்கங்கை
தாங்குதல் தவிர்த்து, தராதலத்து இழித்த தத்துவன் உறைவு
                                                       இடம் வினவில்
ஆங்கு எரிமூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால்
                                                     ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி
                                                      அதுவே.      3
உரை
   
4114. புற்று அரவு அணிந்து, நீறு மெய் பூசி, பூதங்கள் சூழ்தர, ஊர்
                                                                 ஊர்
பெற்றம் ஒன்று ஏறிப் பெய் பலி கொள்ளும் பிரான் அவன்
                                           உறைவு இடம் வினவில்
கற்ற நால்வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார்
                                     அருத்தியால்-தெரியும்
உற்ற பல்புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி
                                                      அதுவே.      4
உரை
   
4115. நிலத்தவர், வானம் ஆள்பவர்,கீழோர், துயர் கெட, நெடிய
                                                     மாற்கு அருளால்,
அலைத்த வல் அசுரர் ஆசு அற, ஆழி அளித்தவன் உறைவு
                                                       இடம் வினவில்
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார்,
                                                      நன்மையால் மிக்க
உலப்பு இல் பல்புகழார், ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி
                                                      அதுவே.      5
உரை
   
4116. மணம் திகழ் திசைகள் எட்டும், ஏழ் இசையும், மலியும் ஆறு
                                                     அங்கம், ஐவேள்வி,
இணைந்த நால்வேதம், மூன்றுஎரி, இரண்டுபிறப்பு, என
                                       ஒருமையால் உணரும்
குணங்களும், அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று
                                   அவை உற்றதும், எல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி
                                                       அதுவே.      6
உரை
   
4117. தலை ஒரு பத்தும் தடக்கை அது இரட்டி தான் உடை
                                       அரக்கன் ஒண்கயிலை
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவு
                                                      இடம் வினவில்
மலை என ஓங்கும் மாளிகை நிலவும், மா மதில் மாற்றலர்
                                                            என்றும்
உலவு பல்புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி
                                                         அதுவே.      8
உரை
   
4118. கள் அவிழ் மலர்மேல் இருந்தவன், கரியோன், என்று இவர்
                                               காண்பு அரிது ஆய
ஒள் எரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவு
                                                   இடம் வினவில்
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி, பனிமலர்ச்சோலை சூழ்
                                                            ஆலை,
ஒள்ளிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி
                                                       அதுவே.      9
உரை
   
4119. தெள்ளியர் அல்லாத் தேரரொடு அமணர், தடுக்கொடு சீவரம்
                                                            உடுக்கும்
கள்ளம் ஆர் மனத்துக் கலதிகட்கு அருளாக் கடவுளார்
                                      உறைவு இடம் வினவில்
நள் இருள் யாமம் நால்மறை தெரிந்து, நலம் திகழ் மூன்று
                                                         எரி ஓம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி
                                                        அதுவே.      10
உரை
   
4120. விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள்
                                            மேய்புலத்து இடறி
ஒளிதர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனை,
களி தரு நிவப்பின் காண்தகு செல்வக் காழியுள்
                                          ஞானசம்பந்தன்,
அளிதரு பாடல்பத்தும் வல்லார்கள், அமரலோகத்து
                                                    இருப்பாரே.      11
உரை