123. திருக்கோணமலை - புறநீர்மை
 
4121. நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு
                                                 அணி திருமேனி
வரை கெழு மகள் ஓர்பாகமாப் புணர்ந்த வடிவினர், கொடி
                                                         விடையர்
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப(அ)ருங்
                                              கன மணி வரன்றி,
குரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை
                                                     அமர்ந்தாரே.      1
உரை
   
4122. கடிது என வந்த கரிதனை உரித்து அவ் உரி மேனிமேல்
                                                       போர்ப்பர்
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை
                    பிறைநுதலவளொடும் உடன் ஆய
“கொடிது” எனக் கதறும் குரைகடல் சூழ்ந்து கொள்ள, முன்
                                                   நித்திலம் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கம் ஆய்த் தோன்றும்
                               கோணமாமலை அமர்ந்தாரே.      2
உரை
   
4123. பனித்த இளந்திங்கள் பைந்தலை நாகம் படர் சடை முடி
                                                 இடை வைத்தார்
கனித்து இளந் துவர்வாய்க் காரிகை பாகம் ஆக முன்
                                             கலந்தவர், மதில்மேல்
தனித்த பேர் உருவ விழித் தழல் நாகம் தாங்கிய மேரு
                                                  வெஞ்சிலையாக்
குனித்தது ஓர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை
                                                அமர்ந்தாரே.      3
உரை
   
4124. பழித்த இளங் கங்கை சடை இடை வைத்து, பாங்கு உடை
                                               மதனனைப் பொடியா
விழித்து, அவன் தேவி வேண்ட, முன் கொடுத்த விமலனார்;
                                                 கமலம் ஆர் பாதர்
தெழித்து முன் அரற்றும் செழுங் கடல்-தரளம் செம்பொனும்
                                                   இப்பியும் சுமந்து
கொழித்து, வன் திரைகள் கரை இடைச் சேர்க்கும்
                            கோணமாமலை அமர்ந்தாரே.      4
உரை
   
4125. “தாயினும் நல்ல தலைவர்!” என்று அடியார் தம் அடி
                                        போற்று இசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர், காண்
                                                         பலவேடர்,
நோயிலும் பிணியும் தொழலர்பால் நீக்கி நுழைதரு நூலினர்
                                                           ஞாலம்
கோயிலும் சுனையும் கடல் உடன் சூழ்ந்த கோணமாமலை
                                                அமர்ந்தாரே.      5
உரை
   
4126. பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணிதன் உயிர்மேல் வரும்
                                                             கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்து, அவற்கு அருளும்
            செம்மையார்; நம்மை ஆள் உடையார்
விரிந்து உயர் மௌவல், மாதவி, புன்னை, வேங்கை, வண்
                                            செருந்தி, செண்பகத்தின்
குருந்தொடு, முல்லை, கொடிவிடும் பொழில் சூழ்
                           கோணமாமலை அமர்ந்தாரே.      6
உரை
   
4127. எடுத்தவன் தருக்கை இழித்தவர், விரலால்; ஏத்திட ஆத்தம்
                                                       ஆம் பேறு
தொடுத்தவர்; செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு
                                     அறியாதவர்; வேள்வி
தடுத்தவர்; வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள்
                                               பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர்; விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமாலை
                                               அமர்ந்தாரே.      8
உரை
   
4128. அருவராது ஒரு கை வெண்தலை ஏந்தி; அகம்தொறும் பலி
                                                  உடன் புக்க
பெருவராய் உறையும் நீர்மையர்; சீர்மைப் பெருங்கடல்
                                        வண்ணனும், பிரமன்,
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரி ஆய் உயர்ந்தவர்;
                                        பெயர்ந்த நல் மாற்கும்
குருவராய் நின்றார், குரைகழல் வணங்க; கோணமாமலை
                                                அமர்ந்தாரே.      9
உரை
   
4129. நின்று உணும் சமணும், இருந்து உணும் தேரும், நெறி
                                        அலாதன புறம்கூற,
வென்று நஞ்சு உண்ணும் பரிசினர்; ஒருபால் மெல்லியலொடும்
                                                        உடன் ஆகி
துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு
                                        திரைபல மோதிக்
குன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை
                                                  அமர்ந்தாரே.      10
உரை
   
4130. குற்றம் இலாதார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை
                                        அமர்ந்தாரை,
கற்று உணர் கேள்விக் காழியர்பெருமான்-கருத்து உடை
                                        ஞானசம்பந்தன்-
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்-ஐந்தும் உரைப்பவர்,
                                        கேட்பவர், உயர்ந்தோர்
சுற்றமும் ஆகித் தொல்வினை அடையார்; தோன்றுவர்,
                                 வான் இடைப் பொலிந்தே.      11
உரை