4.5 திருஆரூர் - பழமொழி
காந்தாரம்
42“ மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே
உய்யல் ஆம்” என்று எண்ணி, உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு,
கொய் உலா மலர்ச்சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரைக்
கையினால்-தொழாது ஒழிந்து,-கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே!
உரை
   
43என்பு இருத்தி, நரம்பு தோல் புகப் பெய்திட்டு, என்னை ஓர் உருவம் ஆக்கி,
இன்பு இருத்தி, முன்பு இருந்த வினை தீர்த்திட்டு, என் உள்ளம் கோயில் ஆக்கி,
அன்பு இருத்தி, அடியேனைக் கூழ் ஆட்கொண்டு அருள் செய்த ஆரூரர் தம்
முன்பு இருக்கும் விதி இன்றி,-முயல் விட்டுக் காக்கைப்பின் போன ஆறே!
உரை
   
44பெருகுவித்து என் பாவத்தை, பண்டு எலாம் குண்டர்கள் தம் சொல்லே கேட்டு
உருகுவித்து, என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி,
அருகுவித்து, பிணி காட்டி, ஆட்கொண்டு, பிணி தீர்த்த ஆரூரர் தம்
அருகு இருக்கும் விதி இன்றி,-அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்ட ஆறே!
உரை
   
45குண்டனாய்த் தலை பறித்து, குவிமுலையார் நகை காணாது, உழிதர் வேனை-
பண்டமாப் படுத்து, என்னைப் பால் தலையில்-தெளித்து, தன் பாதம் காட்டி,
தொண்டு எலாம் இசை பாட- தூமுறுவல் அருள் செய்யும் ஆரூரரைப்
பண்டு எலாம் அறியாதே,-பனி நீரால் பரவை செயப் பாவித்தேனே!
உரை
   
46துன்நாகத்தேன் ஆகி, துர்ச்சனவர் சொல் கேட்டு, துவர் வாய்க்கொண்டு(வ்)
என்னாகத் திரிதந்து, ஈங்கு இருகை ஏற்றிட உண்டேன், ஏழையேன் நான்,
பொன் ஆகத்து அடியேனைப் புகப் பெய்து பொருட்படுத்த ஆரூரரை
என் ஆகத்து இருத்தாதே,-ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே!
உரை
   
47பப்பு ஓதிப் பவணனாய்ப் பறித்தது ஒரு தலையோடே திரிதர் வேனை
ஒப்பு ஓட ஓதுவித்து, என் உள்ளத்தினுள் இருந்து, அங்கு உறுதி காட்டி,
அப்போதைக்கு அப்போதும் அடியவர்கட்கு ஆர் அமுது ஆம் ஆரூரரை
எப்போதும் நினையாதே,-இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே!
உரை
   
48கதி ஒன்றும் அறியாதே, கண் அழலைத் தலை பறித்து, கையில் உண்டு
பதி ஒன்று நெடுவீதிப் பலர் காண நகை நாணாது உழிதர் வேற்கு
மதி தந்த ஆருரில் வார் தேனை வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதி இன்றி, மதி இலியேன், விளக்கு இருக்க மின்மினித்தீக் காய்ந்த ஆறே!
உரை
   
49பூவை ஆய்த் தலை பறித்து, பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு
காவி சேர் கண் மடவார்க் கண்டு ஓடிக் கதவு அடைக்கும் கள்வனேன் தன்
ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்ட ஆரூரரைப்
பாவியேன் அறியாதே,-பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே!
உரை
   
50ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின் வாயின் வீழக்
கட்டானை, காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ
அட்டானை, ஆரூரில் அம்மானை, ஆர்வச் செற்றக் குரோதம்
தட்டானை, சாராதே,-தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே!
உரை
   
51மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்-ஐந்து முடியினொடு தோளும் தாளும்
இறுத்தானை, எழில் முளரித்த விசின் மிசை இருந்தான் தன் தலையில் ஒன்றை
அறுத்தானை, ஆரூரில் அம்மானை, ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை, கருதாதே,-கரும்பு இருக்க இரும்பு கடித்து எயத்த ஆறே!
உரை