4.6 திருக்கழிப்பாலை
காந்தாரம்
52வன பவளவாய் திறந்து, “வானவர்க்கும் தானவனே!” என்கின்றாளால்;
“சின பவளத்திண் தோள்மேல் சேர்ந்து இலங்கும் வெண் நீற்றன்” என்கின்றாளால்;
“அன பவள மேகலை யோடு அப்பாலைக்கு அப்பாலான்” என்கின்றாளால்-
கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள்-கொல்லோ!
உரை
   
53“வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே!” என்கின்றாளால்;
“விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு” என்கின்றாளால்;
“உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப் பட்டு உடையன்” என்கின்றாளால்-
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
உரை
   
54“பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடிமேலது” என்கின்றாளால்;
“நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே” என்கின்றாளால்;-
மறம் கிளர் வேல் கண்ணாள்,- “மணி சேர் மிடற்றவனே!” என்கின்றாளால்-
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
உரை
   
55“இரும்பு ஆர்ந்த சூலத்தன், ஏந்திய ஒர் வெண் மழுவன்” என்கின்றாளால்-
“சுரும்பு ஆர்ந்த மலர்க்கொன்றைச் சுண்ணவெண் நீற்றவனே!” என்கின்றாளால்;
“பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞகவேடத்தன்” என்கின்றாளால்-
கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
உரை
   
56“பழி இலான், புகழ் உடையன், பால் நீற்றன், ஆன் ஏற்றன்” என்கின்றாளால்;
“விழி உலாம் பெருந் தடங்கண் இரண்டு அல்ல, மூன்று உளவே!” என்கின்றாளால்;
“சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே!” என்கின்றாளால்-
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
உரை
   
57“பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே!” என்கின்றாளால்;
“எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே!” என்கின்றாளால்;
“பண் ஆர் முழவு அதிர, பாடலொடு ஆடலனே!” என்கின்றாளால்-
கண் ஆர் பூஞ்சோலைக் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
உரை
   
58“முதிரும் சடை முடி மேல் மூழ்கும், இள நாகம்” என்கின்றாளால்;
“அது கண்டு, அதன் அருகே தோன்றும், இளமதியம்” என்கின்றாளால்;
“சதுர் வெண் பளிக்குக் குழை காதில் மின்னிடுமே” என்கின்றாளால்-
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
உரை
   
59“ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான்” என்கின்றாளால்;
“நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே!” என்கின்றாளால்;
“பார் ஓத மேனிப் பவளம் அவன் நிறமே” என்கின்றாளால்
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
உரை
   
60“வான் உலாம் திங்கள் வளர்புன் சடையானே!” என்கின்றாளால்;
“ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர் ஊர் பலி திரிவான்” என்கின்றாளால்;
“தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன்” என்கின்றாளால்-
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
உரை
   
61“அடர்ப்பு அரிய இராவணனை அரு வரைக் கீழ் அடர்த்தவனே!” என்கின்றாளால்;
“சுடர்ப் பெரிய திருமேனிச் சுண்ணவெண் நீற்றவனே!” என்கின்றாளால்;
“மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு, அன்று, உரைத்தான்” என்கின்றாளால்-
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
உரை