4.7 திருக்கச்சி ஏகம்பம்
காந்தாரம்
62கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை; கரவார்பால்
விரவாடும் பெருமானை; விடை ஏறும் வித்தகனை;
அரவு ஆட, சடை தாழ, அங்கையினில் அனல் ஏந்தி,
இரவு ஆடும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!
உரை
   
63தேன் நோக்கும் கிளிமழலை உமை கேள்வன், செழும் பவளம்
தான் நோக்கும் திருமேனி தழல் உரு ஆம் சங்கரனை;
வான் நோக்கும் வளர்மதி சேர் சடையானை; வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!
உரை
   
64கைப் போது மலர் தூவி, காதலித்து, வானோர்கள்
முப்போதும் முடி சாய்த்து, தொழ நின்ற முதல்வனை;
அப்போடு மலர் தூவி, ஐம்புலனும் அகத்து அடக்கி,
எப்போதும் இனியானை:-என் மனத்தே வைத்தேனே!
உரை
   
65அண்டம் ஆய், ஆதி ஆய், அருமறையோடு ஐம்பூதப்
பிண்டம் ஆய், உலகுக்கு ஒர் பெய் பொருள் ஆம் பிஞ்ஞகனை;
தொண்டர் தாம் மலர் தூவிச் சொல் மாலை புனைகின்ற
இண்டை சேர் சடையானை;-என் மனத்தே வைத்தேனே!
உரை
   
66ஆறு ஏறு சடையானை, ஆயிரம் பேர் அம்மானை,
பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை,
நீறு ஏறு திருமேனி நின்மலனை, நெடுந் தூவி
ஏறு ஏறும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!
உரை
   
67தேசனை; தேசங்கள் தொழ நின்ற திருமாலால்
பூசனை; சனைகள் உகப்பானை; பூவின் கண்
வாசனை; மலை, நிலம், நீர், தீ, வளி, ஆகாசம், ஆம்
ஈசனை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!
உரை
   
68நல்லானை, நல் ஆன நால்மறையோடு ஆறு அங்கம்
வல்லானை, வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை,
சொல்லானை, சொல் ஆர்ந்த பொருளானை, துகள் ஏதும்
இல்லானை, எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!
உரை
   
69விரித்தானை, நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானை, பதம் சந்தி; பொருள் உரு ஆம் புண்ணியனை;
தரித்தானை, கங்கை நீர், தாழ் சடை மேல்; மதில் மூன்றும்
எரித்தானை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!
உரை
   
70ஆகம் பத்து அரவு அணையான், அயன், அறிதற்கு அரியானை;
பாகம் பெண் ஆண் பாகம் ஆய் நின்ற பசு பதியை;
மா கம்பம் மறை ஓதும் இறையானை; மதில் கச்சி
ஏகம்பம் மேயானை;-என் மனத்தே வைத்தேனே!
உரை
   
71அடுத்த ஆனை உரித்தானை; அருச்சுனற்குப் பாசுபதம்
கொடுத்தானை; குலவரையே சிலை ஆகக் கூர் அம்பு
தொடுத்தானை, புரம் எரிய; சுனை மல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை;-என் மனத்தே வைத்தேனே!
உரை